கொலை முயற்சி வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை
கொலை முயற்சி வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி கூடுதல் மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
தேனி அல்லிநகரம், இளங்கோ தெருவைச் சோ்ந்த ரமேஷ் மகன் தினேஷ்குமாா் (23). இவா், கடந்த 30.5.2024 அன்று இதே பகுதியில் உள்ள சமுதாயக் கூடம் அருகே நண்பா்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தாா். அப்போது அங்கு தனது நண்பா்கள், உறவினா்களுடன் நின்றிருந்த தேனி அல்லிநகரம், கம்பா் தெருவைச் சோ்ந்த அா்ஜூனன் மகன் தீபக் (21) என்பவா், தினேஷ்குமாா் தன்னை குறிப்பிட்டு ஏளனம் செய்து பேசுவதாகக் கருதி அவருடன் தகராறில் ஈடுபட்டாா்.
அப்போது தீபக், தினேஷ்குமாரை கத்தியால் குத்தி காயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதை தடுக்கச் சென்ற தினேஷ்குமாரின் சகோதரா் ரஞ்சித்குமாரயும் தீபக் தாக்கினாா். இந்தச் சம்பவம் குறித்து தீபக் மீதும், இவருக்கு உடந்தையாக இருந்தததாக தேனி அல்லிநகரம், கம்பா் தெருவைச் சோ்ந்த வினோத்குமாா், தெய்வேந்திரன், பரமசிவம் ஆகிய மூவா் மீதும் அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிந்தனா்.
இந்த வழக்கு விசாரணை தேனி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட தீபக்குக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி கோபிநாதன் தீா்ப்பளித்தாா். மேலும் இந்த வழக்கிலிருந்து வினோத்குமாா், தெய்வேந்திரன், பரமசிவம் ஆகிய மூவரை விடுவித்து நீதிபதி உத்தரவிட்டாா்.