கம்மின்ஸ் காயம்: சாம்பியன்ஸ் டிராபி ஆஸி. அணியின் புதிய கேப்டன் யார்?
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தனது கணுக்காலில் ஏற்பட்டுள்ள காயத்தால் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதனால் ஆஸ்திரேலிய அணியின் புதிய கேப்டன் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா உள்பட 8 அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் வருகிற 19 ஆம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது.
இந்த நிலையில் கம்மின்ஸின் காயம் ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாக கருதப்பட்டாலும், காயத்தால் விலகியிருக்கும் மற்றொரு முன்னணி பந்து வீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட்டும் அணிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பயிற்சியாளர் மெக் டொனால்ட் தெரிவித்துள்ளார்.
பார்டர் - கவாஸ்கர் தொடரில் சிறப்பாக விளையாடிய கம்மின்ஸ் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் கோப்பையை வெல்லுவதற்கும் உறுதுணையாக இருந்தார். அதனைத் தொடர்ந்து தனக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவிருப்பதால் இலங்கைக்கு எதிரான தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை.
இதையும் படிக்க | பும்ராவின் கொடுங்கனவு, 10 வீரர்களுடன் வென்ற ஆஸி..! கலகலப்பாக பேசிய மார்ஷ்!
இதுபற்றி பயிற்சியாளர் மெக்டொனால்ட் கூறுகையில், “கேப்டன் கம்மின்ஸால் எந்தவிதமான போட்டியிலும் பந்துவீச இயலாது. எங்களது அணிக்கு இப்போது வேறொரு கேப்டன்தான் தேவை. முன்னாள் கேப்டனான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.
சாம்பியன்ஸ் டிராபிக்கு மிட்செல் மார்ஷுக்கு மாற்றாக ஆஸ்திரேலிய அணி இன்னும் யாரை நியமிக்கவில்லை. காலேயில் நடந்த டெஸ்ட் வெற்றிக்குப் பிறகு, ஆஸ்திரேலியாவுக்காக இதுவரை ஒருநாள் போட்டியில் விளையாடாத பியூ வெப்ஸ்டர் ஒருநாள் அணியில் அழைக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக உறுதிப்படுத்தினார்.
மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்றுவீரர்களாக ஆரோன் ஹார்டி மற்றும் மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோர் உள்ளனர். ஆனால் இருவரும் காயத்தால் அவதிப்பட்டுவருவது மேலும் பின்னடைவாக இருக்கிறது. இருப்பினும் இலங்கையில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அபார வெற்றிபெற்றது. ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தும் பொறுப்பும் ஸ்டீவ் ஸ்மித்துக்கே வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.