ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ``எனது வாக்கை செலுத்தியது யார்?'' -வாக்களிக்க வந்த பெண் அதிர்ச்சி
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவையொட்டி, அத்தொகுதிக்கான இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் இரண்டாம் முறையாக இந்தத் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவோரா கடந்த 2023-இல் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, நடைபெற்ற இடைத் தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரும், அண்மையில் மறைந்தை அடுத்து இத்தொகுத்திக்கு மீண்டும் பிப்ரவரி 5-ஆம் தேதி இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2019-05/7dd11176-b4e9-4309-9f76-3d66e5d35254/53497_thumb.jpg)
இந்தத் தேர்தலில் காங்கிரஸுக்குப் பதிலாக திமுக-வே நேரடியாக களமிறங்கியுள்ளது. வி.சி.சந்திரகுமார் திமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். அதிமுக, பாஜக போன்ற பிரதான கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்த நிலையில், நாம் தமிழர் கட்சி சீதாலட்சுமி என்பவரை வேட்பாளராக களமிறக்கியுள்ளது. பெரியார் குறித்து சீமான் சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசி வரும் நிலையில், இந்த தேர்தல் திமுக-வுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் இடையிலான மோதலாகப் பார்க்கப்படுகிறது. கூடுதலாக 44 சுயேச்சை வேட்பாளர் என மொத்தம் 46 வேட்பாளர்கள் ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டுள்ளனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-05/75emx3ph/WhatsApp_Image_2025_02_05_at_09_59_58.jpeg)
விறுவிறு வாக்குப் பதிவு..
ஈரோடு கிழக்குத் தொகுதியில் 2.25 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில், அவர்கள் வாக்களிக்க ஏதுவாக 237 பூத்கள் அமைக்கப்பட்டன. புதன்கிழமை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் உள்ள பள்ளியில் குடும்பத்துடன் சென்று வாக்களித்தார். மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ-வான சரஸ்வதி ஈரோடு சிஎஸ்ஐ பள்ளியில் வாக்களித்தார். தேர்தலையொட்டி, ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு பொதுவிடுமுறை விடப்பட்டிருந்தது. காலையில் இருந்தே மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வந்தனர்.
காலை 7 மணி தொடங்கி 9 மணி வரையிலான இரண்டு மணி நேரத்தில் 10.95 சதவீத வாக்குப் பதிவு நடைபெற்றிருந்தது. இதையடுத்து, 9 மணி முதல் 11 மணி வரையிலான 2 மணி நேரத்தில் 26.03 சதவீதம் வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது. மொத்தமுள்ள 237 பூத்களில் 9 பூத்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு, கோவை சரக டிஐஜி சசிமோகன் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-05/5t9y2ryc/WhatsApp_Image_2025_02_05_at_12_10_13.jpeg)
வாக்குவாதம்...
ஈரோடு கிழக்குத் தொகுதி மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் உள்ள 168-ஆவது பூத்தில் பரிதாபேகம் என்பவர் தனது கணவருடன் வாக்கு செலுத்த வந்துள்ளார். வரிசையில் நின்று வாக்களிக்கும் அறைக்குள் சென்று ஆவணங்களைச் சரிபார்த்தபோது அவரது வாக்கு ஏற்கெனவே செலுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த பரிதாபேகம் வாக்குச்சாவடி அலுவலர்களிடம் முறையிட்டுள்ளார். இருப்பினும் அவரது வாக்கை செலுத்த முடியாது என்பதால், கணவர் மட்டும் வாக்கு செலுத்தியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பரிதாபேகம், "வாக்குச் செலுத்த சென்றபோது தனது வாக்கை ஏற்கெனவே செலுத்தியதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். காரணம் கேட்டால் அதிகாரிகள் சரிவர பதிலளிக்கவில்லை என்றும் தனது வாக்கை செலுத்தியவர்களின் கையெழுத்தை காட்ட சொல்லியும் காட்டவில்லை. என்னுடைய வாக்கைச் செலுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் முறையிடவுள்ளேன்" என்றார்.