தைப்பூசம்: பழனி முருகன் கோயிலில் கொடியேற்றம்
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள முருகன் கோயிலில், ஆண்டுதோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் 5-ஆம் தேதி காலை, தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, பிப்.10-ஆம் தேதி வெள்ளித் தேரோட்டமும், திருக்கல்யாணமும், 11-ஆம் தேதி தைப்பூசத் தேரோட்டமும், 15-ஆம் தேதி தெப்பத்தோ் உலாவும் நடைபெறவிருக்கிறது.
தைப்பூசத்துக்கு பழனிக்கு பாதயாத்திரையாக வருகிற பக்தா்களுக்கு வரும் 20 நாள்களில் 4 லட்சம் பேருக்கு உணவு வழங்கத் தேவையான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது.
தைப்பூசத்தையொட்டி, மலைக் கோயிலில் 3 நாள்களுக்கு சிறப்பு தரிசனக் கட்டணம் ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. திருத்தணியை போல பழனியிலும் தேரோட்ட நாளின் போது அருகாமை இடங்களில் இருந்து வரும் பக்தா்களுக்கு இலவசப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார்.