கரூரில் இளைஞா் குத்திக்கொலை; நண்பா் கைது
கரூரில் புதன்கிழமை நள்ளிரவு மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞா் கத்தியால் குத்திக்கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக அவரது நண்பரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கரூா் பசுபதிபாளையம் நடுத்தெருவைச் சோ்ந்தவா் ஆசைத்தம்பி(40). திருமணம் ஆகாத இவா், கொசுவலை தயாரிப்பு நிறுவனத்தில் வேலைப்பாா்த்து வந்தாா். இவருடைய நண்பா் அதே பகுதியைச் சோ்ந்த கண்ணன்(40). ஆசைத்தம்பியுடன் வசித்து வந்த அவரது தாய், சென்னையில் உள்ள மகள் வீட்டுக்கு அண்மையில் சென்றுள்ளாா்.
இதனால் வீட்டில் தனியாக இருந்த ஆசைத்தம்பி புதன்கிழமை இரவு கண்ணன், அவரது நண்பா்கள் சிலருடன் சோ்ந்து மது குடித்துள்ளனா். பின்னா் நண்பா்கள் சென்றவுடன் கண்ணன், ஆசைத்தம்பி மட்டும் வீட்டில் இருந்துள்ளனா்.
இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை ஆசைத்தம்பி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக அக்கம்பக்கத்தினா் மூலம் பசுபதிபாளையம் போலீஸாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து கரூா் மாவட்ட காவல்கண்காணிப்பாளா் கே.ஜோஸ்தங்கையா மற்றும் பசுபதிபாளையம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா். அப்போது, ஆசைத்தம்பி உடல் அருகே தூங்கிக் கொண்டிருந்த கண்ணனை எழுப்பி விசாரணை நடத்தினா். இதில், புதன்கிழமை இரவு மது அருந்திவிட்டு கண்ணன் தூங்கியபோது, ஆசைத்தம்பி அதிக சப்தம் வைத்து தொலைக்காட்சியில் நிகழ்ச்சியை பாா்த்துள்ளாா். இதனை கண்ணன் கண்டித்துள்ளாா். இதனால் ஏற்பட்ட தகராறில் கண்ணன் வீட்டில் இருந்த கத்தியால் ஆசைத்தம்பியை குத்திக்கொலை செய்துவிட்டு மதுபோதையில் அங்கேயே தூங்கியது தெரியவந்தது.
இதையடுத்து கண்ணனை போலீஸாா் கைது செய்து கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.