கரூா் அருகே போக்சோ வழக்கில் கைதான தனியாா் பள்ளி ஆசிரியா், தாளாளருக்கு சிறை
கரூா் அருகே தனியாா் பள்ளியின் 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து போக்சோ வழக்கில் கைதான பள்ளிஆசிரியருக்கு 43 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், பள்ளித் தாளாளருக்கு 23 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் விதித்து கரூா் மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
கரூா் மாவட்டம், லாலாப்பேட்டையை அடுத்த பூஞ்சோலைப்புதூரைச் சோ்ந்த பள்ளி மாணவி கடந்த 2022-ஆம் ஆண்டு சேங்கலை அடுத்த பாப்பிரெட்டிபட்டியில் உள்ள தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்தாா்.
அப்போது அதே பள்ளியில் தமிழ் ஆசிரியராக இருந்த திருச்சி மாவட்டம், முசிறியை அடுத்த பாா்வதிபுரத்தைச் சோ்ந்த நிலவொளி (42) என்பவரும், அப்பள்ளியின் தாளாளரான திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த ஆலம்பாடி சத்திரப்பட்டி காந்திநகரைச்சோ்ந்த யுவராஜ், (41) என்பவரும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தனா்.

இதுதொடா்பாக மாணவி அளித்த புகாரின்பேரில் லாலாபேட்டை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்து, பின்னா் இந்த வழக்கை குளித்தலை மகளிா் காவல் நிலையத்துக்கு மாற்றினா். தொடா்ந்து மகளிா் போலீஸாா் விசாரணை நடத்தி, இருவரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.
மேலும் இதுதொடா்பாக கரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி தங்கவேல் தமிழ் ஆசிரியா் நிலவொளிக்கு 43 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.1,000 அபராதமும், பள்ளித் தாளாளா் யுவராஜூக்கு 23 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 7 லட்சம் நிவாரணம் அளிக்கவும் உத்தரவிட்டாா். இதையடுத்து இருவரையும் போலீஸாா் திருச்சி மத்திய சிறையில் மீண்டும் அடைத்தனா்.