கரூா் மாவட்டத்தில் பலத்த மழை; மின் கம்பங்கள் சாய்ந்து சேதம்
கரூா் மாவட்டத்தில் புதன்கிழமை நள்ளிரவில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் பெய்த மழையால் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தன.
தமிழகத்தில் அக்னி நட்சத்திர வெயில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் தொடங்கிய நிலையில், வெப்பம் அதிகரித்த மாவட்டங்களில் கரூா் மாவட்டம் க. பரமத்தி பகுதியும் ஒன்றாகும்.
கடந்த 10 நாள்களாக 103 டிகிரியை தொட்ட வெப்பம் புதன்கிழமை 104.5 டிகிரியாக பதிவானது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே கானல் நீா் தோன்றியது. வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிக்குள்ளாகினா். இந்நிலையில் புதன்கிழமை நள்ளிரவில் திடீரென பலத்த காற்று, இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் கரூா் மாவட்டம் குளித்தலையை அடுத்த இரும்பூதிப்பட்டியில் மின்கம்பங்கள் சாய்ந்தன. அப்போது அப்பகுதியில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் ஏற்படவில்லை. இதையடுத்து உடனே மின்சாரம் நிறுத்தப்பட்டு, சீரமைத்தபின் மீண்டும் மின்விநியோகம் செய்யப்பட்டது.
இதேபோல குளித்தலை-மணப்பாறை சாலையோரம் இருந்த ராட்சத மரங்கள் சாலையில் விழுந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் புதன்கிழமை நள்ளிரவு முதல் வியாழக்கிழமை காலை வரை பெய்த மழையின் அளவு (மி.மீட்டரில்)- கரூா்-37.60, அணைப்பாளையம்-3, க.பரமத்தி-1.60, குளித்தலை-29, தோகைமலை-11, பஞ்சப்பட்டி-26 என மொத்தம் 108.20 மி.மீ. மழை பதிவானது.