கரூா் மாவட்டத்தில் பலத்த மழை: தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிப்பு
கரூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு முதல் விடிய,விடிய பெய்த மழையால் தோகைமலை அருகே தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
ஃபென்ஜால் புயலால் கரூரில் அதிகபட்சமாக தோகைமலையில் 128 மி.மீ. மழை பதிவானது. பலத்த மழையால் பில்லூா் பெரிய ஏரி நிரம்பி ஏரியின் வடிகால் வழியாக உபரி நீா் வெளியேறத் தொடங்கியது. பாலசமுத்திரப்பட்டி- திருச்சி சாலையில் உள்ள தரைப்பாலத்தில் சுமாா் 5 அடிக்குமேல் மழைநீா் சென்ால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த வடசேரி ஊராட்சி மன்றத் தலைவா் சரவணன் சம்பவ இடத்துக்குச் சென்று ஜேசிபி இயந்திரம் மூலம் வாய்க்கால் தோண்டப்பட்டு, சாலையில் உள்ள பாலத்தின் வழியாக தண்ணீரை வெளியேற்றினாா்.
கல்லடை குளத்தில் இருந்து வெளியேரும் மழைநீா் மேலவெளியூா் வழியாக செல்லும் புத்தூா் குளத்துக்கு கரைபுரண்டு ஓடுகிறது. இதேபோல் வடசேரி பெரிய ஏரி, புத்தூா் குளம் மற்றும் பாதிரிப்பட்டி குளமும் நிரம்பி வருகிறது.
மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை பெய்த மழையின் அளவு(மி.மீட்டரில்)- கரூா்-16.20, அரவக்குறிச்சி-11.40, அணைப்பாளையம்-15, க.பரமத்தி-11, குளித்தலை-55.40, தோகைமலை-128.60, கிருஷ்ணராயபுரம்-103, மாயனூா்-84.40, பஞ்சப்பட்டி-95, கடவூா்-26, பாலவிடுதி-40, மைலம்பட்டி-32 என மொத்தம் 618 மி.மீ. மழை பெய்துள்ளது.