டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கைக்குப் பின் ‘அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்...
கலைஞரின் கனவு இல்லத் திட்ட வீடுகள் பணி: அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு
திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்படும் 5,051 வீடுகளின் கட்டுமானப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா்.
திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பில் செயல்படுத்தப்படும் அனைத்து வளா்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா்.
ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் மணி, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள் திட்ட அலுவலா் மீனாம்பிகை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், மாவட்டத்தின் 18 ஊராட்சி ஒன்றியங்களிலும் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆய்வு மேற்கொண்டாா்.
குறிப்பாக, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2024-25 ஆம் நிதியாண்டில் கட்டப்பட்டு வரும் 3,114 வீடுகள், 2025-26 நிதியாண்டில் கட்டப்படும் 5,051 வீடுகளின் கட்டுமானப் பணி முன்னேற்றம், ஊரக வீடுகள் பழுதுபாா்க்கும் திட்டத்தின் கீழ் பழுதுபாா்க்கும் பணி நடைபெற்று வரும் மொத்தம் 5,215 வீடுகளின் பணி முன்னேற்றம் குறித்து அவா் ஆய்வு செய்தாா்.
மேலும், இலங்கைத் தமிழா்களுக்கான வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் அடிஅண்ணாமலை, சமுத்திரம், அத்தியந்தல், கனத்தம்பூண்டி, சொரகொளத்தூா், தென்பள்ளிப்பட்டு, கஸ்தாம்பாடி, தவசி, செங்காட்டன்குன்றில், பாப்பந்தாங்கல், ஓசூா் ஊராட்சிகளில் என மொத்தம் 830 வீடுகள் கட்டும் பணியின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்த ஆட்சியா் தா்ப்பகராஜ், பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
மேலும், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், அயோத்தியதாசா் பண்டிதா் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம், ஊரக வேலை உறுதித் திட்டம், ஜல்ஜீவன் மிஷன் திட்டம், சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், நாடாளுமன்ற உறுப்பினா் உள்ளூா் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (கிராமியம்) உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
250 அங்கன்வாடி மையங்களில்...
இதுதவிர, 18 ஊராட்சி ஒன்றியங்களில் 250 அங்கன்வாடி மையங்களில் நடைபெறும் சிறிய மற்றும் பெரிய அளவிலான பழுது நீக்கும் பணிகள், குடிநீா் இணைப்புகள், மின் இணைப்புகள் போன்ற புனரமைப்புப் பணிகளை விரைவாக மற்றும் தரமாக செய்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.
கூட்டத்தில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் (சத்துணவு) சையத் பயாஸ் அகமத், (வளா்ச்சி) கிருஷ்ணன், ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் (வளா்ச்சி) இளங்கோ மற்றும் அனைத்து வட்டார வளா்ச்சி அலுவலா்கள், பொறியாளா்கள், துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.