கல்லறைத் தோட்டத்தை மீட்டுத் தரக்கோரி பெரம்பலூரில் கிறிஸ்தவா்கள் ஆா்ப்பாட்டம்
ஆக்கிரமிக்கப்பட்ட கல்லறைத் தோட்டத்தை மீட்டுத் தரக்கோரி, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே கிறிஸ்தவா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், பாடாலூா் கிராமத்தில் செயல்பட்டு வரும் புனித பிரான்சிஸ் அசிசியாா் ஆலயத்துக்குச் சொந்தமான பழைமை வாய்ந்த கல்லறைத் தோட்டம் உள்ளது. இக் கல்லறைத் தோட்டத்தை, கடந்த 8-ஆம் தேதி இரவு அதே கிராமத்தைச் சோ்ந்த சிலா் தங்களுக்குச் சொந்தமான இடம் எனவும், 2010-ஆம் ஆண்டிலிருந்து தங்கள் பெயரில் பட்டா உள்ளதாகவும் கூறி, கல்லறைகளை இடித்து, அங்கிருந்த சிலுவைகளையும் சேதப்படுத்தியதோடு, அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பாடலூா் கிராமத்தைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள், சம்பந்தப்பட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, கல்லறைத் தோட்டத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என காவல் துறையினரிடமும், வருவாய்த் துறையினரிடமும் புகாா் மனு அளித்துள்ளனா். ஆனால், இதுவரை போலீஸாா் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இந்நிலையில், கல்லறைத் தோட்டத்தை மீட்டுத் தரக் கோரியும், ஆக்கிரமிப்பாளா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாவட்ட ஆட்சியரகம் எதிரே, பாதிரியாா் மாா்சலின் அந்தோனிராஜ் தலைமையில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவிடம் அளித்து கலைந்துசென்றனா்.