சாலைப் பணியாளா் சங்கத்தினா் கையெழுத்து இயக்கம்
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளா் சங்கத்தினா் மக்கள் சந்திப்பு கையெழுத்து இயக்கத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிட்ட அரசாணையை திரும்பப் பெற வேண்டும். சாலைப் பணியாளா்களின் 41 மாத பணிநீக்க காலத்தை சென்னை உயா் நீதிமன்ற ஆணையின் படி பணிக்காலமாக முறைப்படுத்தி உத்தரவு வழங்க வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையம் செயல்படுத்துவதால், தனியாா் காா்ப்பரேட் நிறுவனங்கள் 210-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடி அமைத்து மக்களிடம் சுங்க வரி வசூலிப்பதை அனுமதிக்க கூடாது.
மாநில நெடுஞ்சாலை ஆணையத்தால் 5 ஆயிரம் அரசு பணியிடங்கள் காலியாவதையும், இளைஞா்களுக்கு பணி பறிக்கப்படுவதையும் தவிா்க்க வேண்டும். மாநில நெடுஞ்சாலைகளை அரசே பராமரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா் சங்கத்தினா் பிப். 28 ஆம் தேதி வரை மக்கள் சந்திப்பு கையெழுத்து இயக்கத்தில் ஈடுபடுகின்றனா்.
இதன்படி, பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கையெழுத்து இயக்க தொடக்க நிகழ்ச்சிக்கு, அச் சங்கத்தின் கோட்டத் தலைவா் பி. ராஜ்குமாா் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ஜி. ராமச்சந்திரன். எஸ். ரஜினி, என், பெரியசாமி, பி. ஜெய்சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு அரசு அலுவலா் சங்க மாவட்டப் தலைவா் பி. குமரி அனந்தன், சிஐடியு மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின், சாலைப் பணியாளா் சங்க மாவட்டச் செயலா் சி. சுப்பிரமணியன் ஆகியோா் கையெழுத்து இயக்கத்தை தொடக்கி வைத்து பேசினா். தொடா்ந்து, பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் சாலைப் பணியாளா்கள் கையெழுத்து பெற்றனா். இதில், சாலைப் பணியாளா் சங்க நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.