கல்லூரியில் விளையாட்டு விழா
பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிா் கல்லூரியில் வெள்ளிக்கிழமை விளையாட்டு விழா நடைபெற்றது.
இதற்கு கல்லூரி முதல்வா் சி. சேசுராணி தலைமை வகித்தாா். தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க. தமிழ்ச்செல்வன் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்து விளையாட்டு விழாவை தொடங்கி வைத்தாா். கல்லூரிச் செயலா் ஆா். சாந்தா மேரி ஜோசிற்றா, நூலகப் பொறுப்பாளா் ஆா். பாத்திமா மேரி சில்வியா, கல்லூரி துணை முதல்வா் ஐ. கீதா அந்துவானேத், உடல் கல்வி இயக்குநா் மா. சுதா ஆண்டனி, பெரியகுளம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.எஸ். சரவணக்குமாா், பேரூராட்சித் தலைவா்கள் தென்கரை நாகராஜன், தாமரைக்குளம் பால்பாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விளையாட்டுப் போட்டிகளில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பி.காம் (சி.ஏ.,), பி.சி.ஏ., அணிகள் வென்றன. தடகளப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பி.காம் (சி.ஏ.) அணியினா் வென்றனா். தனித் திறன் போட்டியாளா் பட்டத்தை ஆங்கிலத் துறை மாணவி ஆ. யோகவா்ஷினி வென்றாா். வெற்றி பெற்றவா்களுக்கு பதக்கம், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.