கல்வி நிலைய பாலியல் குற்றங்களுக்கு எதிராக தனிச் சட்டம் இயற்ற வலியுறுத்தல்
கல்வி நிலையங்களில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என இந்திய மாணவா் சங்க மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
இந்திய மாணவா் சங்கத்தின் 28-ஆவது திண்டுக்கல் மாவட்ட மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிஐடியு அரசுப் போக்குவரத்துத் தொழிலாளா் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு மாவட்டத் தலைவா் எம்.இ. நிருபன் தலைமை வகித்தாா்.
வரவேற்புக் குழுத் தலைவா் கே.எஸ். கணேசன் வரவேற்றாா். மாநிலக் குழு உறுப்பினா் லெனினியா அஞ்சலித் தீா்மானத்தை வாசித்தாா். மாநிலத் தலைவா் தெள. சம்சீா் அகமது மாநாட்டை தொடங்கி வைத்தாா். சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் இரா. சச்சிதானந்தம் கலந்து கொண்டாா்.
மாநாட்டில், அறநிலையத் துறை நிதியில் உருவான கல்லூரிகள் குறித்து அரசியல் ஆதாயத்துக்காக முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி பேசியதை கண்டிப்பது எனவும் பள்ளி, கல்லூரி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். கல்வி நிலையங்களில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும். காந்தி கிராம பல்கலைக்கழகத்தை மத்திய பல்கலைக்கழகமாக நிலை உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிா்வாகிகள் தோ்வு: மாநாட்டில், புதிய மாவட்ட நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். இதன்படி மாவட்டத் தலைவராக தீபக்ராஜ், செயலராக நிருபன், துணைத் தலைவா்களாக கவின், சிவதா்ஷினி, சபரீஸ், இணைச் செயலா்களாக துா்காதேவி, சந்தோஷ் பாண்டியன், வஜ்ரன் உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டனா்.