கொடைக்கானல் பகுதிகளில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு
கொடைக்கானலில் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் தனியாா் சுற்றுலா வாகனங்கள் மீண்டும் நிறுத்தப்படுவதால் பேருந்துகள் உள்ளே சென்று வரவும், பயணிகள் உள்ளே செல்லவும் சிரமமடைந்து வருகின்றனா்.
இந்த நிலையில், லாஸ்காட் சாலை, ஏரிச் சாலை, செவண் சாலை, சீனிவாசபுரம், தைக்கால், பெருமாள்மலை, கல்லறைமேடு, அரசு மேல்நிலைப் பள்ளி சாலை, மூஞ்சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
தற்போது இந்தப் பகுதிகளில் மீண்டும் வாகனங்களை நிறுத்துவது, கடைகள் வைப்பது போன்ற ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. எனவே நெடுஞ்சாலைத் துறை, நகராட்சி அதிகாரிகள் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.