கல்வியை மாநில பட்டியலின்கீழ் கொண்டு வருவது அவசியம்: பேரவையில் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: தேசிய கல்வி கொள்கை, நீட் தேர்வு, ஹிந்தி திணிப்பை தொடர்ந்து எதிர்த்து வருகிறோம் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று (ஏப். 15) சட்டப்பேரவையில் பேசினார்.
5 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு, பேரவை செவ்வாய்க்கிழமை மீண்டும் காலை கூடியதும், மாநில சுயாட்சி தொடர்பான அறிவிப்புகளை முதல்வர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டார்.
மாநில சுயாட்சி தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் 110-ஆவது விதியின் கீழ் அறிக்கை வெளியிட்டு வாசித்தார். அப்போது, மாநில உரிமைகளை பாதுகாக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஜோசப் குரியன் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும், அவர் பேசுகையில், நீட் தேர்வால் மாணவர்கள் பலர் உயிரிழந்திருப்பதை சுட்டிக்காட்டி பேசிய முதல்வர், நாங்கள்(திமுக) இத்தேர்வை தொடர்ந்து எதிர்த்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மும்மொழிக் கொள்கை என்கிற பெயரில் மத்திய அரசு தமிழ்நாட்டில் ஹிந்தியை திணிக்கப் பார்ப்பதாகவும் விமர்சித்தார்.
தேசிய கல்வி கொள்கையை எதிர்ப்பதால் தமிழ்நாட்டுக்கு ரூ.2,500 கோடி நிதியை மத்திய அரசு விடுவிக்க மறுப்பதாக பேசிய முதல்வர், இதனையடுத்து, கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வருவது அவசியம் என்றும் எடுத்துரைத்தார்.
இதையும் படிக்க:மாநில உரிமைகள் மீட்டெடுக்க உயர்நிலைக் குழு: முதல்வர் அறிவிப்பு!
மாநில உரிமைகளை பாதுகாக்க அமைக்கப்படும் உயர்நிலைக் குழுவுக்கு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜோசப் குரியன் தலைமை வகிப்பார்.
பணி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அஷோக் வர்தன் ஷெட்டி (இந்திய கடல்சார் பல்கலைக்கழகக் முன்னாள் துணை வேந்தர்) மற்றும் பேராசிரியர் எம். நாகநாதன் (தமிழ்நாடு மாநில திட்ட ஆணையத்தின் முன்னாள் துணை தலைவர்) ஆகியோர் இக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.