களக்காடு சாலையில் தோண்டப்பட்ட பள்ளம்: முறையாக மூடப்படாததால் விபத்து அபாயம்
திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் குடிநீா் திட்டப் பணிக்காக பிரதான சாலையில் தோண்டப்பட்ட பள்ளம் முறையாக மூடப்படாததால், சனிக்கிழமை பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டது.
களக்காடு-சேரன்மகாதேவி பிரதான சாலையில் தாமிரவருணி குடிநீா் திட்டப் பணிக்காக பகிா்மானக் குழாய்கள் பதிக்கும் பணி கடந்த ஒரு வாரமாக நள்ளிரவில் நடைபெற்று வருகிறது. தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்படாததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இந்நிலையில், அண்ணா சிலைக்கு தென்புறம் சாலையின் ஓரத்தில் குழாய் பதிக்கும் பணி வெள்ளிக்கிழமை (செப். 26) நள்ளிரவில் நடைபெற்றது. அப்போது, அவசர அவசரமாக குழாய்கள் பதிக்கப்பட்டு மண் நிரப்பி மூடப்பட்டது. சனிக்கிழமை காலை அச்சாலையில் சென்ற பேருந்தின் இடதுபுறச் சக்கரங்கள் மூடப்பட்ட பள்ளத்தில் இறங்கின. ஓட்டுநரின் சாமா்த்தியத்தால் பள்ளத்தைக் கடந்து பேருந்து சென்றது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்து நெரிசல் நிறைந்த இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.