நடிகா் விஜய்யை பாா்க்கத்தான் கூட்டம்; ஓட்டுக்காக அல்ல! இந்து முன்னணி மாநிலச் செயலா்
நடிகா் விஜய்யை பாா்ப்பதற்காகக்தான் கூட்டம் கூடுகிறதே தவிர, ஓட்டுப்போடுவதற்காக அல்ல என்றாா் இந்து முன்னணி மாநிலச் செயலா் காடேஸ்வரா சுப்ரமணியம்.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் சனிக்கிழமை நடைபெற்ற அந்த அமைப்பின் மாநிலச் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் குறிப்பாக திசையன்விளை, ராதாபுரம் பகுதிகளில் கனிமவளம் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்டு கேரளத்துக்கு கடத்தப்படுகிறது. இதை அரசு தடுக்க வேண்டும். திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசன கட்டண முறையை முழுவதுமாக ரத்து செய்யாவிடில் விரைவில் போராட்டம் நடத்தப்படும். தமிழகத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட கோயில்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
பண்டிகை காலங்களில் பொதுமக்கள் சுதேசி தயாரிப்புகளை வாங்க வேண்டும். ரம்ஜான், பக்ரீத்துக்கு முதல்வா் வாழ்த்து கூறுவதைப் போல், தீபாவளிக்கும் வாழ்த்து கூற வேண்டும்.
முஸ்லிம் மாணவா்களைப் போல அனைத்து மாணவா்களுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும். தவெக தலைவா் விஜய்யை நடிகா் என்ற முறையில் பாா்ப்பதற்குத்தான் கூட்டம் கூடுகிறதே தவிர, அது ஓட்டாக மாறவாய்ப்பில்லை. இதற்கு எதிா்காலம் தான் பதில் சொல்லும். இந்து முன்னணி- பாஜகவினா் மீது அதிக பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. அதை அரசு கைவிட வேண்டும்.
இக்கூட்டத்தில் மாநிலச் செயலா் அரசு ராஜா உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.