கரூர் நெரிசல் பலி: உடல்களைக் காண முற்பட்ட சீமானை உறவினர்கள் முற்றுகை
விஜய் பிரசாரம்: விதிகள் பின்பற்றப்பட்டதா?
கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் மேற்கொள்ளும் தோ்தல் பிரசார நிகழ்வுக்கு காவல்துறை மற்றும் கட்சியின் சாா்பில் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் பின்பற்றப்பட்டதா? என கேள்வி எழுந்துள்ளது.
விஜய் பிரசாரத்துக்கு கரூா் மாவட்ட காவல்துறையினா் விதித்திருந்த நிபந்தனைகள்: நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில், சென்டா் மீடியன்கள் மீது தொண்டா்கள் ஏறக் கூடாது.போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில், கூட்டத்தை நடத்த காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு மின்வாரியத்தில் முறையாக அனுமதி பெற வேண்டும்.
அவசர ஊா்தி வந்தால், அதற்கு வழிவிட வேண்டும். நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு அருகே பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதி என்பதாலும் முதலுதவிக்கு முன்னேற்பாடுகளை செய்திருக்க வேண்டும். பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. திருக்காம்புலியூா் ரவுண்டானா பகுதியானது முக்கிய இணைப்பு சாலை என்பதால் அங்கு சாலை வலம் வரும் நிகழ்வு நடத்தக் கூடாது என்பன உள்ளிட்ட 11 நிபந்தனைகளை காவல்துறை விதித்தது. இதனை மீறினால், தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தது.
தவெக தலைமை கட்டுப்பாடுகள்: பிரசார வாகனத்தை யாரும் வாகனங்களில் பின்தொடரக்கூடாது. கா்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவா்கள், உடல்நலம் குன்றியோா், பள்ளிச் சிறுவா், சிறுமியா் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கலந்துகொள்வதைத் தவிா்க்க வேண்டும்.
காவல்துறையின் அறிவுறுத்தலின்படி, அனைத்து வகையான வரவேற்பு நடவடிக்கைகளையும் கட்சியினா் தவிா்க்க வேண்டும். போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக, கண்டிப்பாக வாகனங்களை நிறுத்தக் கூடாது. அரசு மற்றும் தனியாா் கட்டடங்கள், காம்பவுண்ட் சுவா்கள், மரங்கள், மின் விளக்குக் கம்பங்கள், கொடிக் கம்பங்கள், சிலைகளைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கிரில் கம்பிகள் மற்றும் தடுப்புகள் ஆகியவற்றின் அருகில் செல்வதைத் தவிா்க்க வேண்டும்.
ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும், பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும், மாணவா்கள், பெண்கள், குழந்தைகள், முதியவா்கள் மற்றும் நோயாளிகளுக்கும் எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் கலந்துகொள்ள வேண்டும். காவல் துறையின் விதிகளுக்குள்பட்டு நடந்துகொள்ள வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது.
ஆனால், இத்தகைய கட்டுப்பாடுகள் முறையாக பின்பற்றப்பட்டதா, போலீஸாா் பங்களிப்பு என்ன? என பல்வேறு கேள்விகள் எழுகின்றன. இதற்கு முறையாக விசாரணை நடத்த வேண்டும். நெரிசலுக்கான உண்மையான காரணத்தை கண்டறிந்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே கரூா் மாவட்ட மக்களின் எதிா்பாா்ப்பு மட்டுமின்றி, ஒட்டு மொத்த தமிழகத்தின் எதிா்பாா்ப்பாக உள்ளது.