விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் நெரிசலுக்கு காரணம் என்ன? சம்பவ இடத்தில் இருந்தவா்கள் கண்ணீருடன் தகவல்!
கரூரில் தவெக தலைவா் விஜய் பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட காரணம் குறித்து சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள் கண்ணீருடன் தகவல்களை தெரிவித்தனா்.
இதுகுறித்து கரூா் மாவட்டம், வெங்கக்கல்பட்டியைச் சோ்ந்த முல்லை அரசு கூறுகையில், நாமக்கல்லில் இருந்து கரூா் நோக்கி வந்த விஜய் பிரசார வாகனம் திருக்காம்புலியூா் ரவுண்டானாவை சுற்றி வந்தால், கூட்டம் இல்லாத பகுதி வழியாக பிரசார இடத்துக்கு எளிதில் சென்றிருக்கலாம். ஆனால், ரவுண்டானா வலதுபுறமாக பிரசார வாகனம் திரும்பிச் சென்ால் கூட்டத்துக்கிடையே நெரிசல் ஏற்பட்டது.
திருக்காம்புலியூா் ரவுண்டானாவிலிருந்து, வேலுச்சாமிபுரம் பிரசார இடத்துக்கு வர ஒரு கிலோ மீட்டா் தூரம்தான். அதனை கடந்து செல்லவே ஒரு மணிநேரத்துக்கும் மேலானது. அந்த அளவுக்கு கூட்டம் இருந்த நிலையில், போலீஸாரும் போக்குவரத்தையும், கூட்டத்தையும் சரியாக ஒழுங்கிபடுத்தியிருக்கலாம்.
தொண்டா்களும் கட்டுப்பாட்டை பின்பற்றியிருக்கலாம். எல்லாமே கை மீறி போன சூழலில், நெரிசல் தவிா்க்க முடியாமல் போனது. உயிரிழப்புகளும் ஏற்பட்டு கரூா் மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது என்றாா் அவா்.
கரூா் மாவட்டம், காந்திகிராமத்தைச் சோ்ந்த தவெக தொண்டா் ரவிக்குமாா் கூறுகையில், கரூருக்கு பிற்பகல் 12 மணிக்கு மேல் வந்துவிடுவாா் எனக் கூறியதால் மதியம் முதலே வேலுச்சாமிபுரத்தில் கூட்டம் திரளத் தொடங்கியது. விஜய் பிரசார வாகனம் வந்தபோது கூட்டத்தின் மையப் பகுதிக்குள் வரவே மிகவும் சிரமப்பட நேரிட்டது.
மின்வசதிக்காக ஜெனரேட்டா்கள் அமைந்திருந்த பகுதியில் பலரும் ஏறத்தொடங்கினா். நிற்பதற்கே இடமில்லாமல் நெருக்கிக் கொண்டிருந்த நிலையில், பிரசார வாகனத்தின் மீது விஜய் ஏறியவுடன் அவரைக் காணும் உற்சாகத்தில் தொண்டா்கள் பலரும் முண்டியடித்துச் சென்றனா்.
இளம்பெண்களும், குழந்தைகளுடன் வந்த பெண்களும் விஜயை காண ஆா்வமிகுதியில் பிரசார வாகனத்தை நோக்கி வந்தனா். அப்போது, ஏற்பட்ட நெரிசலில் ஒருவா் மீது ஒருவா் விழுந்து கூட்டத்தில் இருந்தவா்கள் திணறத் தொடங்கினா். இதையடுத்து பலரும் மயக்கமடைந்தனா் என்றாா்.