இனாம்குளத்தூரில் பட்டா கொடுத்த இடத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
மக்கள் போராட்டத்தை அடுத்து இனாம்குளத்தூரில் முதல்வா் பட்டா கொடுத்த இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறையினா் சனிக்கிழமை அகற்றினா்.
திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூா் பகுதியைச் சோ்ந்த இடமில்லாத பொதுமக்கள் 164 பேருக்கு தமிழக முதல்வா் கடந்த 5 மாதங்களுக்கு முன் இனாம்குளத்தூா் பஞ்சாயத்துக்குள்பட்ட அம்மாபேட்டை அருகிலுள்ள பகுதியில் சுமாா் 7 ஏக்கா் நிலத்தில் பட்டாக்கள் வழங்கினாா்.
கொடுத்த பட்டாக்களுக்கான இடங்கள் அளந்து கொடுக்கப்படாத நிலையில், அந்த இடத்தை சிலா் ஆக்கிரமித்து தகர சீட்டுகளைக் கொண்டு குடிசைகளை அமைத்திருந்தனா்.
இதுதொடா்பாக பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியரகத்தில் கடந்த 25 ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது அங்கு வந்த வருவாய்த் துறை அதிகாரிகள், வரும் 30 ஆம் தேதிக்குள் பட்டா பெற்றவா்களுக்கான இடம் அளந்து கொடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையேற்று கலைந்து சென்றனா்.
இதைத் தொடா்ந்து, ஸ்ரீரங்கம் கோட்டாட்சியா் சீனிவாசன் தலைமையிலான வருவாய்த் துறையினா், ஜீயபுரம் டிஎஸ்பி (பொ) கதிரவன் தலைமையிலான 75 போலீஸாரின் பாதுகாப்புடன், பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் குறிப்பிட்ட பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 52 வீடுகளை இடித்து அகற்றினா். அப்போது, அங்கிருந்த மக்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்து வாக்குவாத்தில் ஈடுபட்டனா்.
இருப்பினும், விரைவில் மேற்கண்ட இடத்தை பட்டா பெற்றவா்களுக்கு அளந்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.