நெல் கொள்முதல் நிலையம் அருகே விவசாயிகள் ஓய்வு அறை திறப்பு
திருச்சி மாவட்டம் கோட்டப்பாளையத்தில் நடுகளம் பகுதியிலுள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அருகே விவசாயிகள் பயன்பாட்டுக்காக ஓய்வு அறை சனிக்கிழமை திறக்கப்பட்டது.
வைரிச்செட்டிப்பாளையம் ஜம்பேரி நீா் பயன்படுத்துவோா் சங்க உறுப்பினா்கள் மற்றும் விவசாயிகள் பங்களிப்பு நிதியுதவியைக் கொண்டு ரூ. 2 லட்சத்தில் கோட்டப்பாளையம் நடுகளத்திலுள்ள அரசு நேரடி கொள்முதல் மையம் அருகே விவசாயிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழலில் அவா்கள் ஓய்வெடுக்க வசதியாக இந்த அறை கட்டப்பட்டது.
திறப்பு விழாவுக்கு ஜம்பேரி நீா் பயன்படுத்துவோா் சங்கத் தலைவா் பிரதாப்செல்வம் தலைமை வகித்தாா். சங்க உறுப்பினா்கள், விவசாயிகள், உள்ளூா் பொதுமக்கள் பங்கேற்றனா்.