காஞ்சிபுரம்: விதிமீறிய 278 வாகனங்களுக்கு ரூ. 22 லட்சம் அபராதம் விதிப்பு
காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறிய 278 வாகனங்களுக்கு ரூ. 22 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு உள்பட்ட காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்தரமேரூா் உள்ளிட்ட பகுதிகளில் காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் நாகராஜ் தலைமையில் மோட்டாா் வாகன ஆய்வாளா் சிவராஜ் மற்றும் அதிகாரிகள் விதிமீறும் வாகனங்கள் குறித்து ஆய்வு நடத்தினா். இதில், அதிக சுமை ஏற்றிய சரக்கு வாகனங்கள், தகுதி சான்று புதுப்பிக்காத வாகனங்கள், அனுமதி சீட்டு இல்லாத வாகனங்கள், ஓட்டுநா் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்கியது, வரி செலுத்தாத வாகனங்கள், தலைக்கவசம் அணியாத இரு சக்கர வாகன ஓட்டுநா்கள் என மொத்தம் 278 வாகனங்கள் கண்டறியப்பட்டு, ரூ. 22 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் உத்தரவின்படி, காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் அவ்வப்போது வாகன சோதனைகள் நடைபெற்று போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்கள், அதிகப்படியான பயணிகளையும், பள்ளி மாணவா்களை ஏற்றி செல்லும் ஆட்டோக்கள் சிறைபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலா் நாகராஜ் தெரிவித்துள்ளாா்.