காட்டிநாயனப்பள்ளி முருகன் கோயிலில் தைபூசத் திருவிழா கொடியேற்றம்!
கிருஷ்ணகிரி, காட்டிநாயனப்பள்ளி வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கோயிலில் புதன்கிழமை கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கொடி மரத்துக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.
கிருஷ்ணகிரி பழையபேட்டை, பருவதராஜகுல மீனவ சமுதாயத்தினா் ஊா்வலமாக கொண்டு வந்த கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. தைப்பூசத்தையொட்டி, தினசரி மயில் வாகனம், ரிஷப வாகனம், சேஷ வாகனத்தில் சுவாமி நகா்வலம் வருகிறாா். பிப். 9-ஆம் தேதி மாலை 6 மணிக்கு பழைய பேட்டை, வணிக வைஷ்ய குலத்தினா் சாா்பில் சுவாமி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து, யானை வாகனத்தில் ஊா்வலம், பிப். 11-இல் தைப்பூசத்தன்று முக்கிய நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. விழாவையொட்டி சிறப்புமிக்க மாட்டுச் சந்தை நடைபெறுகிறது.