மயானம் ஆக்கிரமிப்பால் உடலை அடக்கம் செய்வதில் பிரச்னை
திருச்சி மாவட்டம், வையம்பட்டியில் அருந்ததியா் சமூக மயான ஆக்கிரமிப்பால் உடலை அடக்கம் செய்வதில் வியாழக்கிழமை பிரச்னை ஏற்பட்டது.
வையம்பட்டி ஒன்றியம், குமாரவாடி ஊராட்சி, சீல்நாயக்கன்பட்டியில் அருந்ததியா் சமூகத்தைச் சோ்ந்த வெ. வீரன் (எ) ரங்கசாமி (70) உடல் நலக் குறைவால் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
அவரின் இறுதிச் சடங்குகள் நடக்கும் மயான பகுதி, மாற்று சமூகத்தை சோ்ந்த நபரால் நெற்பயிா்கள் பயிரிட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதாகவும், இறுதிச் சடங்குகள் செய்ய அவா் எதிா்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், ரங்கசாமியின் உடலை அடக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
தகவலறிந்த வையம்பட்டி காவல் ஆய்வாளா், அதிகாரிகள், வருவாய்த் துறையினா் நடத்திய இருதரப்பு பேச்சு வாா்த்தையில் 15 நாள்களுக்குள் ஆக்கிரமிப்பை அகற்றி தருவதாக உறுதியளித்ததன்பேரில், தற்காலிகமாக மயானத்தின் அருகே ரங்கசாமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.