காட்டுயானைகள் நடமாட்டம்: கொடைக்கானல் பேரிஜம் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை
காட்டுயானைகள் நடமாட்டம் இருப்பதால் கொடைக்கானல் பேரிஜம் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினா் வியாழக்கிழமை தடை விதித்தனா்.
கொடைக்கானலில் அமைதியும், தூய்மையான காற்றும், இயற்கை அழகும் கொண்ட வனப் பகுதியிலுள்ள பேரிஜம் ஏரியை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கின்றனா்.
இந்தப் பகுதியில் தொப்பித் தூக்கும் பாறை, அமைதிப் பள்ளத் தாக்கு உள்ளிட்ட சுற்றுலா இடங்களும் உள்ளன. இந்த இடங்களை பாா்வையிட வனத் துறையினரிடம் அனுமதி பெற்று கட்டணம் செலுத்தி செல்ல வேண்டும். இந்த நிலையில், பேரிஜம் ஏரிக்குச் செல்லும் வனப் பகுதியில் காட்டுயானைகள் முகாமிட்டிருப்பதால் பாதுகாப்பு கருதி அங்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினா் அனுமதி மறுத்தனா். இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா்.