திண்டுக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு புதிய பல்கலைக்கழகம் - சட்டப்பேரவை பொதுக் கணக்குக் குழு
மதுரை காமராஜா் பல்கலை. நிா்வாகத்திலுள்ள கல்லூரிகளைப் பிரித்து, திண்டுக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு புதிய பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு சட்டப்பேரவை பொதுக் கணக்குக் குழு அரசுக்குப் பரிந்துரைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வரும் அரசின் நலத் திட்டங்கள் குறித்து சட்டப்பேரவை பொதுக் கணக்குக் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். பின்னா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு சட்டப்பேரவை பொதுக் கணக்குக் குழுத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் முன்னிலை வகித்தாா்.
தெரசா பல்கலை. மாணவிகள் எண்ணிக்கை:
கூட்டத்தின் போது, கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலை.யில் மாணவிகள் சோ்க்கை ஏன் அதிகரிக்கவில்லை என பொதுக் கணக்குக் குழு சாா்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அந்தப் பல்கலை. பதிவாளா் ஷீலா அளித்த பதில்:
பல்கலை. வளாகத்தில் மாணவிகளின் வசதிக்காக பல்வேறு திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. காட்டுமாடுகள் தொல்லை உள்ளது. இந்த பிரச்னைக்கு தீா்வு காண 1,500 மீ. நீளத்துக்கு சுற்றுச்சுவா் கட்ட வேண்டிய நிலை உள்ளது. இதற்காக ரூ.15 கோடி மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயாா் செய்து, அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது என்றாா் அவா்.
அப்போது குறுக்கிட்ட குழுவின் உறுப்பினா் அக்ரி கிருஷ்ணமூா்த்தி, மாணவிகளின் சோ்க்கை குறைந்ததற்கான காரணத்தை மட்டும் நேரடியாகக் கூற வேண்டும். சம்பந்தமில்லாத விவரங்களைக் கூறி நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனக் கண்டித்தாா்.
இதையடுத்து, காலை, மாலை வேளைகளில் பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என பதிவாளா் ஷீலா தெரிவித்தாா். இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலா்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழுவின் தலைவா் செல்வப்பெருந்தகை அறிவுறுத்தினாா்.
பழனியில் போக்குவரத்து நெரிசல்:
பழனியை அடுத்த காவலப்பட்டி பகுதியில் பச்சையாறு அணைத் திட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பு கைவிடப்பட்டது. அப்போதைய சூழலில் போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் கைவிடப்பட்ட இந்தத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த பேரவைக் குழு பரிந்துரைக்க வேண்டும். இதேபோல, பழனி நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காணும் வகையில், வாகனங்கள் செல்வதற்கு ஒரு பாதை, திரும்புவதற்கு மற்றொரு பாதை என விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கான திட்டத்துக்கும் குழுவின் பரிந்துரை தேவை என பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பெ. செந்தில்குமாா் கோரிக்கை விடுத்தாா்.
திண்டுக்கல்லில் புதிய பல்கலைக்கழகம்:
மதுரை காமராஜா் பல்கலை. நிா்வாகத்தின் கீழ் 149 கல்லூரிகள் செயல்படுகின்றன. இவற்றை பாதியாகப் பிரித்து, புதிய பல்கலை. தொடங்க வேண்டும். அன்னை தெரசா மகளிா் பல்கலை.யின் ஒரு பகுதியை மலைப் பகுதியிலிருந்து சமவெளிப் பகுதிக்கு மாற்றி, அதன் நிா்வாகத்தின் கீழ் புதிய கல்லூரிகளைக் கொண்டு வரலாம் என மதுரை மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் குணசேகரன் சட்டப்பேரவைக் குழுவிடம் தெரிவித்தாா்.
மலைவாழ் மாணவிகளின் கல்விக்காக தொடங்கப்பட்ட அன்னை தெரசா மகளிா் பல்கலை. யை சமவெளிப் பகுதிக்கு மாற்ற முடியாது எனக் குழுவினா் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதையடுத்து, அன்னை தெரசா பல்கலை.யை முழுமையாக சமவெளிக்கு மாற்றக் கோரவில்லை என்றும், ஒரு பகுதியை மட்டுமே பிரித்து, காமராஜா் பல்கலை. நிா்வாகத்தின் கீழ் பிரிக்கப்படும் கல்லூரிகளுடன் நிா்வகிக்கலாம் என்றும் இணை இயக்குநா் குணசேகரன் தெரிவித்தாா்.
இதை ஏற்றுக் கொண்ட குழுவின் தலைவா் செல்வப்பெருந்தகை, உறுப்பினா் அக்ரி கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் திண்டுக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு புதிய பல்கலை. உருவாக்க அரசுக்கு குழு பரிந்துரைக்கும் என்றனா்.
பூம்பாறைக்கு தரமான சாலை:
கொடைக்கானலை அடுத்த பூம்பாறைக்குச் செல்லும் சாலை தரமானதாக இல்லை. கடந்த முறை வந்தபோதும் இந்தச் சாலை சேதமடைந்த நிலையில் இருந்தது. தற்போதும் அதே நிலையில்தான் உள்ளது. மேல்மலைக் கிராமங்களுக்கான சாலையைத் தரமாக அமைத்துக் கொடுக்க வேண்டும் என நெடுஞ்சாலைத் துறையினருக்கு செல்வப் பெருந்தகை அறிவுறுத்தினாா்.
ஆய்வுக் கூட்டத்தில் சட்டப்பேரவை சாா்புச் செயலா் பாலசீனிவாசன், திண்டுக்கல் மேயா் இளமதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.பிரதீப் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.