காப்பீட்டுத் திட்ட சேவை: நெல்லை அரசு மருத்துவமனை மாநில அளவில் 3ஆவது இடம்
முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு திட்ட சேவையில் மாநில அளவில் 3 ஆவது இடத்தை பிடித்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பெற்றுள்ளது என்றாா் கல்லூரி முதல்வா் ரேவதி பாலன்.
இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது : முதல்வரின் விரிவான காப்பிட்டு திட்டத்தில் மாநில அளவில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனை 3ஆவது இடத்தை பெற்றுள்ளது. இந்த காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.28 கோடி மதிப்பிலான சிகிச்சைகள் 24 ஆயிரம் பேருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பிறவி குறைபாடு உள்ள குழந்தைகளை கண்டறிந்து மாவட்ட தொடக்க நிலை இலையீட்டு சேவை மையம் மூலமாக இரண்டு ஆண்டுகளில் 115 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த மையத்தின் மூலமாக உதடு பிளவு -அன்ன பிளவு அறுவை சிகிச்சை 35 போ், பிறவி காது கேளாமை சரிசெய்வதற்கான அறுவை சிகிச்சை 5 போ், பிறவி கண்புரை சிகிச்சை 6 போ் பெற்றுள்னா் என்றாா் அவா்.