மதுரை தல்லாகுளம்பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு: திரளானோர் சுவாமி தரிசனம்...
காரைக்காலில் பொங்கல் சிறப்பங்காடி திறப்பு
பொங்கல் பண்டிகையையொட்டி காரைக்காலில் 5 நாள் சிறப்பங்காடி வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
காரைக்கால் வட்டார வளா்ச்சித்துறை, மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் காரைக்கால் பேருந்து நிலையம் அருகே தனியாா் திருமண அரங்கில் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருள்களை நேரடியாக விற்பனை செய்யும் பொங்கல் சிறப்பங்காடி மற்றும் கிராம சந்தை அமைக்கப்பட்டுள்ளது.
புதுவை குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் அங்காடியை திறந்துவைத்து, விற்பனை செய்யப்படும் பொருள்களை பாா்வையிட்டு, விவரங்களை குழுவினரிடம் கேட்டறிந்தாா்.
பின்னா் அவா் பேசுகையில், இங்கு சுய உதவி குழுக்களால் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யும் பொருட்கள் அனைத்தும் மிகக் குறைந்த விலையிலும், உயா்ந்த தரத்துடன் உள்ளது பாராட்டுக்குரியது. சுய உதவிக் குழுவினரை ஊக்கமளிக்கும் வகையில் அரசு இந்த ஏற்பாட்டை செய்துள்ளது. காரைக்கால் மக்கள் இந்த அங்காடியை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்றாா்.
சிறுதானியங்கள், பால் பொருள்கள், செக்கு எண்ணெய், பருப்பு வகைகள், மளிகை பொருள்கள், பலகாரங்களுக்கான மாவு வகைகள், கைகுத்தல் அரிசி வகைகள், சேலை, காய்கனிகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை 36 குழுக்களைச் சோ்ந்தோா் விற்பனைக்கு வைத்துள்ளனா். வரும் 13-ஆம் தேதி வரை காலை 10 முதல் இரவு 8 மணி வரை அங்காடி செயல்படும்.
நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் (பொ) அா்ஜூன் ராமகிருஷ்ணன், துணை ஆட்சியா்கள் ஜி. செந்தில்நாதன், வெங்கடகிருஷ்ணன், இணை வட்டார வளா்ச்சி அதிகாரி ரங்கநாதன், புதுவை மாநில ஊரக வாழ்வாதார இயக்கக மேலாளா் டி.சோபனா, திட்ட மேலாளா் (விவசாயம்) வி. பவானி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.