இந்து நெறிமுறைகளைப் பின்பற்றாத 18 ஊழியர்கள் நீக்கம்: திருப்பதி தேவஸ்தானம்!
காலியாக இயக்கப்பட்ட கோவை - திண்டுக்கல் முன்பதிவில்லா சிறப்பு ரயில்!
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கோவையிலிருந்து திண்டுக்கல் இடையே இன்று முதல் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
ஆனால், இந்த சிறப்பு ரயில் பற்றி மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால் முதல் நாளான இன்று பயணிகள் இன்றி ரயில் இயக்கப்பட்டது.
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கப்படுவதாக சேலம் கோட்டம் ரயில்வே தெரிவித்து உள்ளது.
இந்நிலையில் இன்று காலை முதல் இந்த ரயில் இயங்கி வருகிறது. இந்த ரயில் கோயம்புத்தூர் - திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா ரயிலாக இயக்கப்படும். இந்த மெமு விரைவு சிறப்பு ரயில் கோயம்புத்தூரில் இருந்து (பிப்ரவரி 5) இன்று முதல் பிப்ரவரி 14 வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) காலை 09.35 மணிக்கு கோவையில் புறப்பட்டு அதே நாள் மதியம் 1.10 மணிக்கு திண்டுக்கல் சென்று அடையும்.
அதே போல மறு வழித்தடத்தில், திண்டுக்கல் - கோயம்புத்தூர் முன்பதிவில்லா மெமு விரைவு சிறப்பு ரயில் திண்டுக்கல்லில் இருந்து (பிப்ரவரி 5) இன்று முதல் பிப்ரவரி 14 வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) பிற்பகல் 2.00 மணிக்குப் புறப்பட்டு அதே நாள் மாலை 5.50 மணிக்கு கோயம்புத்தூர் வந்து அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இன்று காலை முதல் இந்த ரயில் இயக்கப்பட்டு வந்தாலும், மக்களுக்கு இந்த ரயில் சேவை பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாததால் பக்தர்கள் இல்லாமல் காலியாக இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.