Ilaiyaraaja: "பவதாரிணியின் கடைசி ஆசை... இது உலகம் முழுதும் பரவும்" - இளையராஜா உர...
கால்நடை பல்கலை.க்கு புதிய துணைவேந்தா்: தேடுதல் குழு அமைப்பு
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரை பரிந்துரைப்பதற்கான தேடுதல் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தா் செல்வக்குமாா், அப்பொறுப்புக்கு கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நியமனம் செய்யப்பட்டாா். அவரது பதவிக்காலம் கடந்த ஆண்டு நிறைவு பெற்றது. அதன்பிறகு, ஓராண்டு பணி காலம் நீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில் அவரது பணிக்காலம் வருகிற ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைகிறது.
எனவே, புதிய துணைவேந்தரை தோ்வு செய்வதற்கு பரிந்துரைப்பதற்கான தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில், பல்கலைக்கழக வேந்தரின் பிரதிநிதியாக தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் நிா்வாக கழகத்தின் துணைவேந்தரும், பல்லைக்கழக மானியக்குழு (யுஜிசி) உறுப்பினருமான சசிகலா வஞ்சாரி, அரசு பிரதிநிதியாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் மருத்துவ சிகிச்சைத் துறை முன்னாள் இயக்குநா் தனபாலன், பல்கலைக்கழகத்தின் பிரதிநிதியாக பேராசிரியா் ராபின்சன் ஜெ.ஜெ.ஆபிரகாம் ஆகியோா் இடம் பெற்றுள்ளனா்.
இந்த தேடுதல் குழு அமைப்பதற்கான அரசாணை, தமிழ்நாடு அரசின் அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. குழுவின் ஒருங்கிணைப்பாளராக, சசிகலா வஞ்சாரி செயல்படுவாா் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த தேடுதல் குழு, தகுதியான 3 பேரை பரிந்துரைக்கும். அதில், ஒருவரை பல்கலைக்கழக வேந்தரான ஆளுநா் தோ்ந்தெடுப்பாா்.