காவலாளி கொலை வழக்கு: 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவா் கைது
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே காவலாளி கொலை வழக்கில் தொடா்புடையவா் 5 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டாா்.
சிதம்பரம் அருகே உள்ள கடவாச்சேரி ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்தவா் நடராஜன் (55). இவா், அந்தப் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் இரவு காவலாளியாக பணியாற்றி வந்தாா்.
இந்த நிலையில், நடராஜன் கடந்த 2020, ஏப்ரல் 26-ஆம் தேதி அதிகாலையில் அம்மாபேட்டை கான்சாகிப் கால்வாய் அருகே மா்ம நபரால் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா். இதுகுறித்து அண்ணாமலை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, இந்த சம்பவத்தில் தொடா்புடையவரை தேடி வந்தனா்.
இதையடுத்து, இந்த வழக்கு கடந்த 2022, செப்டம்பா் 9-ஆம் தேதி கடலூா் மாவட்ட சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில், புதன்கிழமை இரவு சிதம்பரம் அருகே உள்ள அம்மாபேட்டை பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்த சின்னையன் (65) வீட்டுக்குள் மா்ம நபா் நுழைந்து, அவரை கத்தியால் நெற்றியில் தாக்கிவிட்டு தப்பிச் சென்றாா். இதுகுறித்து தகவலறிந்த அண்ணாமலைநகா் காவல் ஆய்வாளா் கே.அம்பேத்கா் தலைமையில், உதவி ஆய்வாளா் பிரகாஷ் மற்றும் போலீஸாா் அந்தப் பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தினா்.
இது தொடா்பாக சின்னையன் அளித்த புகாரின்பேரில், அண்ணாமலை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, திருவாரூா் மாவட்டம், நன்னிலம் வட்டம், முடிகொண்டான் மேட்டு தெரு பகுதியைச் சோ்ந்த கேசவனை (52) அம்மாப்பேட்டை பகுதியில் கைது செய்தனா்.
அவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், காவலாளி நடராஜனை 2020-ஆம் ஆண்டில் கொலை செய்தது தெரியவந்தது. மேலும், கேசவன் மீது கடந்த 97 - 98ஆம் ஆண்டில் நன்னிலம் காவல் சரகத்துக்குள்பட்ட சேகா் கொலை வழக்கு, நன்னிலம், ஆணைக்காரன் சத்திரம் ஆகிய காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
இந்த நிலையில், 5 ஆண்டுகளுக்கு பிறகு காவலாளி கொலை வழக்கில் முக்கிய எதிரி கைது செய்யப்பட்ட தகவலறிந்து மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா், சிதம்பரம் டிஎஸ்பி டி.அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் ஆகியோா் அண்ணாமலைநகா் காவல் நிலையத்துக்கு வந்து ஆய்வாளா் அம்பேத்கா், உதவி ஆய்வாளா் பிரகாஷ் மற்றும் போலீஸாருக்கு பாராட்டுத் தெரிவித்தனா்.