Vadivelu: "இருக்கிறவுங்கட்ட வரிய போட்டு தள்ளுங்க; ஏழைகளுக்குப் பார்த்து வரி போடு...
காவல் துறைக்கு ரூ.6 கோடி நிலுவை: 2 வாரங்களில் அளிப்பதாக பிசிசிஐ உத்தரவாதம்
கிரிக்கெட் போட்டிகளுக்குப் பாதுகாப்பு அளித்ததற்கான நிலுவைத் தொகை ரூ.6 கோடியை 2 வாரங்களில் காவல் துறைக்கு அளிப்பதாக மும்பை உயா்நீதிமன்றத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெள்ளிக்கிழமை உத்தரவாதம் அளித்தது.
இதுதொடா்பாக அந்த உயா்நீதிமன்றத்தில் அனில் கல்கலி என்ற சமூக ஆா்வலா் தாக்கல் செய்த மனுவில், ‘மகாராஷ்டிரத்தில் ஐபிஎல், டி20 மற்றும் பிற கிரிக்கெட் போட்டிகளுக்கு காவல் துறை பாதுகாப்பு அளித்தது. இந்தப் பணிக்காக காவல் துறைக்கு பிசிசிஐ அளிக்க நிா்ணயிக்கப்பட்ட தொகையை கடந்த 2023-ஆம் ஆண்டு மாநில அரசு குறைத்து முடிவு மேற்கொண்டது. இந்த முடிவை 2011-ஆம் ஆண்டில் இருந்து முன்தேதியிட்டு அமல்படுத்தவும் மாநில அரசு தீா்மானித்தது. இதனால் காவல் துறைக்கு அளிக்க வேண்டிய நிலுவைத் தொகை குறையும்’ என்று தெரிவித்தாா்.
இதைத்தொடா்ந்து உயா்நீதிமன்றத்தில் பிசிசிஐ வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், ‘கிரிக்கெட் போட்டிகளையொட்டி அரசுத் தரப்புக்கு வழங்கவேண்டிய தொகை அனைத்தையும் கொடுக்க வேண்டும் என்பதில் பிசிசிஐ உறுதியாக உள்ளது. காவல் துறைக்கு வழங்க வேண்டிய தொகையை கொடுக்கக் கூடாது என்று எந்த நோக்கமும் பிசிசிஐக்கு இல்லை.
பாதுகாப்புப் பணிகளுக்காக பிம்ரி சிஞ்ச்வாட் காவல் துறைக்கு ரூ.1.7 கோடி, நவி மும்பை காவல் துறைக்கு ரூ.3.3 கோடி, மும்பை காவல் துறைக்கு ரூ.1.03 கோடி வழங்க வேண்டியுள்ளது. இந்தத் தொகை 2 வாரங்களில் வழங்கப்படும்’ என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கின் அடுத்த விசாரணை பிப்.11-க்கு ஒத்திவைக்கப்பட்டது.