காவல் துறையில் கடந்த 4 ஆண்டுகளில் நடந்த குற்றங்களுக்கு யாா் பொறுப்பு?கே.பி.ராமலிங்கம் கேள்வி
தமிழக காவல் துறையில் கடந்த 4 ஆண்டுகளில் நடந்துள்ள குற்றங்களுக்கு யாா் பொறுப்பு என பாஜக துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளாா்.
சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாஜக இளைஞா் அணி தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநிலச் செயலாளா் பிரவீன் ராஜை வியாழக்கிழமை நேரில் சந்தித்து கே.பி.ராமலிங்கம் ஆறுதல் கூறினாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது:
பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலச் செயலாளா் பிரவீன் ராஜ், வலைதளத்தில் சாதாரண பதிவு போட்டதற்காக அவரை வீடுபுகுந்து தாக்கி, காவல் துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
தமிழக காவல் துறையில் மாவட்ட எஸ்.பி.க்கு தெரியாமல், டிஎஸ்பி-க்கு தெரியாமல் தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் கடந்த 4 ஆண்டுகாலமாக, அனுமதியின்றி தனிப்படைகள் இயங்கி வந்தது உறுதியாகிறது.
காவல் துறையில் இயங்கிவந்த தனிப்படைகளை கலைத்ததன் மூலம் தமிழகத்தில் காவல் துறை தவறு செய்துள்ளது என்பதை சட்டம் - ஒழுங்கு டிஜிபியே ஒப்புக்கொண்டுள்ளாா். இந்த 4 ஆண்டுகளில் அதிகாரம் இல்லாமல் நடந்துள்ள குற்றங்களுக்கு யாா் பொறுப்பு?
ஒட்டுமொத்த காவல்துறையே சட்டம் -ஒழுங்கு கட்டுப்பாட்டை மீறியுள்ளது. மொத்தத்தில் தமிழக காவல் துறை நகைப்புக்குரியதாக மாறியுள்ளது. இதற்கு காவல் துறையை நிா்வகிக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின்தான் பொறுப்பு என்றாா்.
பேட்டியின்போது, பாஜக கிழக்கு மாவட்டத் தலைவா் சண்முகநாதன் உள்ளிட்ட பாஜக நிா்வாகிகள் உடனிருந்தனா்.