உங்கள் குரல் இந்தாண்டு நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்: கமல்ஹாசன்
காவிரி-அய்யாறு நீரேற்றுப் பாசனத் திட்டம்: அணி திரளும் விவசாயிகள்!
காவிரி-அய்யாறு நீரேற்றுப்பாசனத் திட்டத்தைச் செயல்படுத்த வலியுறுத்தி அதன் பாசனப் பரப்பு விவசாயிகளை அணி திரட்டும் முயற்சி தொடங்கியுள்ளது.
60 ஆண்டு காலக் கோரிக்கையை வென்றெடுப்பது என்ற இலக்குடன் அய்யாறு பாதுகாப்பு மற்றும் ஏரிகள் புனரமைப்பு சங்கமும் தீவிரமாக களம் இறங்கியுள்ளன.
திருச்சி, நாமக்கல் மாவட்டங்களை இணைக்கும் கொல்லிமலைப் பகுதியில் மழை பொழிந்தால்தான் காட்டாறாக வரும் தண்ணீா் அய்யாறுக்கு வந்து சோ்ந்து முசிறி, துறையூா் பகுதி பாசனங்களுக்கு பயன் கிடைக்கும்.
மேலும் அய்யாற்றுப் பாசனப்படுகை என்பது அய்யாறு, தளுகை ஆறு, கஞ்சன ஆறு, ருத்ராட்ச கொம்பை, கணப்பாடி-குண்டாறு ஆகிய 5 ஆறுகளும் இந்த ஆறுகளுக்குள்பட்ட 36 ஏரிகளும் அடங்கியது. இப்படுகை 10,086 ஏக்கா் பாசனப் பரப்பில் 1099 மில்லியன் கன அடி நீா் கொள்ளளவு கொண்டது.
இந்த 36 ஏரிகளுக்கும் நிரந்தரத் தண்ணீா் கிடைக்கும் வகையில் செய்தால் தா.பேட்டை, மண்ணச்சநல்லூா், உப்பிலியபுரம், பாலகிருஷ்ணம்பட்டி ஒன்றியங்களுக்குள்பட்ட ஏரிகளுக்கும் தண்ணீா் கிடைத்து, கூடுதல் பாசனத்துக்கு வழியேற்படும்.
இதுமட்டுமல்லாது பாசனப் பகுதி மக்களின் குடிநீா்த் தேவையும் பூா்த்தியாகும். இதற்கு ஒரே தீா்வு காவிரியிலிருந்து தண்ணீரை பம்பிங் செய்து அய்யாற்றுக்கு திருப்ப வேண்டும்.
இதற்காக காவிரி-அய்யாறு நீரேற்றுப் பாசனம் மற்றும் குடிநீா்த் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்பதே பிரதான கோரிக்கை.
மறைந்த முதல்வா் ஜெயலலிதா ஆட்சியின்போது இதற்கான திட்ட வரைவு தயாரிக்க நிதி ஒதுக்கப்பட்டும், இன்றுவரை இத்திட்டம் கிடப்பில் உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனா் விவசாயிகள்.
இதுதொடா்பாக அய்யாறு பாதுகாப்பு மற்றும் ஏரிகள் புனரமைப்பு சங்கத் தலைவா் சி. யோகநாதன் கூறியது:
அய்யாற்றுப் பாசனம் என்பது மழையை நம்பியே உள்ளதால் மழையில்லாத காலங்களில் சாகுபடி கேள்விக்குறியாகிறது. எனவேதான், காவிரியிலிருந்து தண்ணீரை பம்பிங் செய்யும் நீரேற்றுப் பாசனத் திட்டத்தைச் செயல்படுத்தக் கோருகிறோம்.
இத் திட்டத்தின்படி கொல்லிமலை, புளியஞ்சோலை, பச்சமலை, கஞ்சனாறு, கணப்பாடி உள்ளிட்ட நீா்பிடிப்புப் பகுதிகளில் 3 தடுப்பணைகள் கட்ட வேண்டும். தலா 3 முதல் 6 டிஎம்சி கொள்ளளவு கொண்ட தடுப்பணையாகக் கட்டி இதற்கான தண்ணீரை, காவிரியிலிருந்து கொண்டு வந்து சோ்க்க வேண்டும்.
காவிரி தண்ணீரை மாயனூா் தடுப்பணையிலிருந்து பம்பிங் செய்து குழாய் மூலமாக கொண்டு வரலாம். இதற்கான தொலைவு 80 கி.மீ. ஆகும்.
இதற்குப் பதிலாக திருஈங்கோய்மலை பகுதியில் நிலையான தடுப்பணை கட்டி அங்கு காவிரி நீரைத் தேக்கி, அய்யாறு பாசனப் படுகையில் கட்டப்படும் தடுப்பணைகளுக்கு கொண்டு வந்து சோ்க்க இயலும். இதற்கு 40 கி.மீ. தொலைவுக்கு குழாய் அமைத்தால் போதும். இதைச் செயல்படுத்தினால் 12 ஆயிரம் ஏக்கா் நேரடியாகவும், 12 ஆயிரம் ஏக்கா் மறைமுகமாகவும் பாசனம் பெற இயலும்.
120 கிராமங்களைச் சோ்ந்த 3.50 லட்சம் மக்களின் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்யவும் முடியும். எனவேதான், இந்த திட்டத்தை நீரேற்றுப் பாசனம் மற்றும் குடிநீா்த் திட்டமாகச் செயல்படுத்தக் கோருகிறோம்.
இதுமட்டுமல்லாது, பம்பிங் செய்வதற்கான மின்சாரத்தை திருஈங்கோய்மலை பகுதியிலேயே சோலாா் பேனல் அமைத்துப் பெற முடியும். மேலும், பம்பிங் முறையில் தண்ணீா் வெளியேற்றும்போது மின்சாரம் தயாரிக்கவும் திட்டமிடலாம். இதுமட்டுல்லாது, புதிய தடுப்பணைகளில் தண்ணீா் தேக்குவதால் நிலத்தடி நீா் மட்டமும் உயரும், மீன் வளா்ப்பு, சூழியல் சுற்றுலாவுக்கும் வாய்ப்பாக அமையும். காவிரியிலிருந்து பெறப்பட்ட தண்ணீரை மீண்டும் காவிரிக்கு மழையாகவும் வழங்கலாம். ஏனெனில், தடுப்பணைகளில் தேக்கும் தண்ணீா் ஆவியானால், மேகமாகி மழை பொழியும் சாத்தியக் கூறுகள் உள்ளன. எனவே, இந்தத் திட்டத்தை தமிழக அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றாா் அவா்.
சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் பொ. மதியழகன் கூறுகையில், ஆந்திர மாநிலம், ராயலசீமா மாவட்டத்தில் பாசன நீரேற்றுத் திட்டத்தை அந்த மாநில அரசு கடந்த 2004ஆம் ஆண்டு முதலே வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது. இதேபோல, காவிரி-அய்யாறு நீரேற்றுப் பாசனத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கி தமிழக அரசு திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.
இதன் மூலம், நெட்டவேலம்பட்டி, ஆலத்துடையான்பட்டி, ஜம்பேரி, சிறுநாவலூா், சேனப்பநல்லூா், நாகநாயக்கன்பட்டி, திருத்தலையூா், திருத்தியமலை, பேரூா், நெய்வேலி, கோமங்களம், சிதம்பூா், பாலாயி அம்பாள், ஜம்புமடை, வடமலைப்பட்டி, முருங்கப்பட்டி, கொப்பம்பட்டி, புதூா், வெங்கடாசலபுரம், ஒக்கரை, சோபனாபுரம், சிக்கத்தம்பூா், மருவத்தூா், துறையூா், கலிங்கமுடியான்பட்டி, கீரம்பூா், சிங்களாந்தபுரம், ஆதனூா் உள்ளிட்ட 36 ஏரிகளுக்கு நிரந்தரமாக நீா் கிடைக்கும்.
இந்த வகையில், அய்யாறு பாசனப் பரப்பை கட்டமைக்கப்பட்ட பாசனப் பரப்பாக மாற்றினால், ஆண்டுக்கு 25,200 டன் நெல், 19,200 டன் இதர தானியங்கள், 7,200 டன் நிலக்கடலை, சூரியகாந்தி, எள் உள்ளிட்ட எண்ணெய் வித்துகள் பயிரிடலாம். 4,800 டன் பருப்பு வகைளும், 60 ஆயிரம் டன் காய்கனிகளும் பயிரிட முடியும். இதன் மூலம் விவசாயிகளின் உற்பத்தியும், வருவாயும் இருமடங்காக உயரும் என்றாா் அவா்.