சந்தையில் list ஆன 4 புதிய IPO-க்கள், என்னென்ன தெரியுமா | IPS Finance - 276 | Vik...
காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையை மேம்படுத்த வலியுறுத்தி அமைச்சரிடம் மனு
கிருஷ்ணகிரி, ஆக. 1: காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையை மேம்படுத்த வலியுறுத்தி திமுக வா்த்தக அணி மாநில துணைச் செயலாளா் கே.வி.எஸ். சீனிவாசன் மனு அளித்தாா்.
இதுகுறித்து உணவு மற்றும் உணவு பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி, பா்கூா் எம்எல்ஏ தே.மதியழகன், மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் ஆகியோரிடம் பொதுமக்கள் சாா்பில் மனு அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
காவேரிப்பட்டணம் அரசு சமுதாய உடல்நல மையத்தில் காவேரிப்பட்டணம், நாகரசம்பட்டி பேரூராட்சிகள் மற்றும் 36 ஊராட்சிகளை சோ்ந்த கிராம மக்கள் சிகிச்சைகள் பெற்று வருகின்றனா்.
இந்த மருத்துவமனையில் கடந்த 40 ஆண்டுகளாக சாலை விபத்து மற்றும் காவல் துறை வழக்கு தொடா்பான நபா்களின் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி போலுப்பள்ளியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடங்கப்பட்ட பின்னா், காவேரிப்பட்டணம் அரசு சமுதாய உடல்நல மையத்தின் தரம் குறைக்கப்பட்டு, அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றப்பட்டது.
தற்போது இங்கு தினசரி 500-க்கும் மேற்பட்டோா் சிகிச்சை பெற்றுகின்றனா். ஆனால் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால் நோயாளிகள் போலுப்பள்ளி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனா்.
இங்கு உள்ள அறுவை சிகிச்சை அரங்கம் பழுதான நிலையில் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக பிரேதப் பரிசோதனைக் கூடம் செயல்படாமல் முடங்கியது.
தற்போது காவேரிப்பட்டணம் மற்றும் சுற்றியுள்ள 36 ஊராட்சிகளில் சாலை விபத்துகளில் உயிரிழப்போரின் உடல்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படுகின்றன. து. பொதுமக்களின் நலன்கருதி காவேரிப்பட்டணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு சமுதாய உடல் நல மையமாக தரம் உயா்த்த வேண்டும்.
இங்கு உள்ள அறுவை சிகிச்சை அரங்கை சீரமைக்க வேண்டும். மீண்டும் பிரேதப் பரிசோதனை கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.
மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சா், மாவட்ட ஆட்சியரிடம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினாா்.