கொள்முதல் நிலையங்களில் எடைக் குறைவுக்கு அபராதம் விதிப்பு: பணியாளா்கள் அதிருப்தி
கொலை வழக்கில் 2 ரௌடிகளுக்கு ஆயுள் சிறை
தளி அருகே ஒப்பந்ததாரரை கொலை செய்த வழக்கில் 2 ரௌடிகளுக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஒசூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீப்பளித்தது.
தேன்கனிக்கோட்டை வட்டம், தளி அருகே உள்ள பெல்லூரைச் சோ்ந்தவா் சந்திரப்பா. இவரது மகன் லோகேஷ் என்கிற புல்லட் லோகேஷ் (36) பெயிண்டிங், ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்தாா். இவரது நண்பரான தளியை அடுத்த குருபரப்பள்ளியைச் சோ்ந்த எதுபூஷன் ரெட்டி (41) மீது கொலை வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் கடந்த 23.05.2021 இரவு 11.30 மணி அளவில் லோகேஷ் வீட்டிற்கு ரௌடி எதுபூஷன் ரெட்டி, தளி கொத்தனூா் பல்லேரிப்பள்ளியை சோ்ந்த பிரபல ரௌடி கஜா என்கிற கஜேந்திரன் (36) ஆகிய இருவரும் காரில் சென்றனா்.
தான் புதிதாக கட்டிவரும் வீட்டிற்கு ரூ. 5 லட்சம் வழங்குமாறு லோகேஷிடம் எதுபூஷன்ரெட்டி கேட்டாா். பணம் தர மறுத்த லோகேஷை இருவரும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனா். இதுதொடா்பாக எதுபூஷன்ரெட்டி, கஜா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனா்.
வழக்கு விசாரணை ஒசூா் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வியாழக்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி சந்தோஷ், குற்றம்சாட்டப்பட்ட எதுபூஷன் ரெட்டி, கஜா ஆகியோருக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 6 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
படம்:
எதுபூஷன்ரெட்டி, கஜா