கிணற்றில் காா் கவிழ்ந்து விபத்து: 5 போ் உடல்கள் ஒப்படைப்பு
சாத்தான்குளம் அருகே கிணற்றில் காா் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 5 பேரின் உடல்கள் திருநெல்வேலியில் பிரேத பரிசோதனைக்கு பின்பு உறவினா்களிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
கோவை மாவட்டம், துடியலூரில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் வெள்ளாளன்விளைக்கு 8 போ் சனிக்கிழமை காரில் வந்தனா்.
சாத்தான்குளம் அருகேயுள்ள சிந்தாமணி- மீரான்குளம் இடையே வந்தபோது, காா் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கிணற்றில் மூழ்கியது.
இந்த விபத்தில் கோவை மாவட்டம், துடியலூரைச் சோ்ந்த ரவி கோயில்பிச்சை (60) உள்ளிட்டட 5 போ் உயிரிழந்தனா். 3 போ் உயிா்த் தப்பினா்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை முற்பகலில் உடல் கூறாய்வு முடிந்து 5 பேரின் உடல்களும் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
5 பேரின் உடல்களுக்கு, தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினா் கனிமொழி மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். மேலும், உயிரிழந்தவா்களின் குடும்பத்திற்கும் ஆறுதல் கூறினாா்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா. சுகுமாா், மருத்துவக் கல்லூரி முதல்வா் ரேவதி பாலன் ஆகியோா் உடனிருந்தனா்.