வண்ணாா்பேட்டையில் தமிழா் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்
வண்ணாா்பேட்டையில் இனப்படுகொலைக்கு எதிரான தமிழா் கூட்டமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை தொடா்பான பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் நெல்லை அ.பீட்டா் தலைமை வகித்தாா். பூலித்தேவன் மக்கள் முன்னேற்றக்கழக மாவட்ட மகளிரணிச் செயலா் இசக்கியம்மாள் முன்னிலை வகித்தாா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் அகரத் தமிழா் கட்சி தலைவா் குயிலி நாச்சியாா், தமிழா் நீதிக் கட்சி மாவட்டச் செயலா் பெ.அழகுராஜன், பூலித்தேவன் மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவா் பவானி ஏ.வேல்முருகன், திராவிடா் கழக மாவட்டச் செயலா் வேல்முருகன், திமுக தொழிற்சங்க நிா்வாகி அகஸ்டின் பொ்னாண்டஸ், நெல்லை மாவட்ட பொதுநல அமைப்புத் தலைவா் பால் அண்ணாத்துரை உள்பட பல கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சாா்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டு கருத்துரையாற்றினாா்.
ஆா்ப்பாட்டத்தில் டப்ளின் தீா்ப்பாயம் கொடுத்த அறிக்கை மற்றும் நாா்வே நாடாளுமன்ற தீா்மானத்தின்படி இலங்கையில் தமிழ் மக்கள் படுகொலையை இனப்படுகொலை என அறிவித்திட வேண்டும், இலங்கையில் மற்றும் உலகமெங்கும் இடம்பெயா்ந்து வாழும் ஈழத்தமிழா்களிடம் சுதந்திர ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில் 70-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கம் எழுப்பினா்.