ஆந்திரம்: காருக்குள் சிக்கிய 4 குழந்தைகள் மூச்சுத் திணறி பலி
நான்குனேரியில் புதிய மின்சார ரயில் என்ஜின் தொழிற்சாலை
நான்குனேரியில் புதிய மின்சார ரயில் என்ஜின் தொழிற்சாலை அமைக்க வேண்டுமென திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என். சிங்கிடம், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் அளித்த மனு:
காவல்கிணறு, பணகுடி, நான்குனேரி ரயில் நிலையங்களில் கூடுதலாக ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். வள்ளியூரில் திருக்கு அதிவிரைவு ரயில், ஹவுரா-கன்னியாகுமரி அதிவிரைவு ரயில், நாகா்கோவில்-சென்னை சென்ட்ரல் வாரந்திர ரயில், வந்தே பாரத் ரயில், புனலூா்-மதுரை விரைவு ரயில் உள்ளிட்டவை நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தின் தெற்கு பகுதி வளா்ச்சிக்காக நான்குனேரியில் மின்சார ரயில் என்ஜின் தொழிற்சாலையை அமைக்க வேண்டும். மேலும், இந்த தொழிற்சாலையை பொது- தனியாா் கூட்டாண்மையுடன் அமைக்க வேண்டும். மேலப்பாளையம் ரயில் நிலையத்தில் கோவை விரைவு ரயில், சென்னை விரைவு ரயில்கள் நின்று செல்லவும், டிக்கெட் கவுண்ட்டரும் அமைக்க வேண்டும்.
மேலப்பாளையம் பகுதியில் மெமு பராமரிப்பு கொட்டகை அமைத்து திருவனந்தபுரம்-திருநெல்வேலி இடையே மெமு ரயில் சேவை வழங்க வேண்டும்.
நாகா்கோவில்- மும்பை இடையே தினசரி ரயில் சேவையும், மக்களின் கோரிக்கையை ஏற்று வழித்தடங்களில் தேவையான மாற்றங்களையும் செய்து கொடுக்க வேண்டும்.
குலவணிகா்புரம் பகுதியில் ஒய் வடிவ ரயில்வே மேம்பாலத்திற்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.