தேசிய சுகாதார இயக்கம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல...
கிண்டி கிங் ஆய்வக மருந்து தர மேம்பாட்டுக்கு ரூ. 12 கோடி ஒதுக்கீடு
சென்னை: சென்னை கிண்டி கிங் ஆய்வகத்தில் மருந்து தரக் கட்டுப்பாடு மேம்பாட்டுக்காக ரூ. 12 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தில் தமிழக அரசின் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் கீழ் சென்னை கிண்டியில் நோய்த் தடுப்பு கிங் மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சி நிலையத்துக்கு நவீன வகை கருவிகளுடன் மருந்துகள் தர கட்டுப்பாடு ஆய்வக மேம்பாட்டுக்கு ரூ. 12 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டுக்கு பாதுகாப்பான தரமிக்க மருந்துகள் மட்டுமே சென்றடைய தமிழக அரசால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
கிண்டி நோய் தடுப்பு கிங் மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 1948-ஆம் ஆண்டு தமிழகத்தில் மருந்துகளின் தூய்மை மற்றும் பாதுகாப்புத் திறன் அறிய உயிரியல் பொருள்கள் கட்டுப்பாட்டுத் துறை நிறுவப்பட்டது. மருந்து ஆய்வாளா்கள் மற்றும் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்திடமிருந்து ஊசி மூலம் செலுத்தப்படும் அனைத்து மருந்து மாதிரிகள் வாடிக்கையாகவும் இடைசோதனைக்காகவும் பெறப்பட்டு பல்வேறு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.
மருந்து சாா்ந்த பாதுகாப்பு கண்காணிப்பு, இந்திய ரத்த கண்காணிப்புத் திட்டம் போன்ற திட்டங்களில் மருந்து சாா்ந்த எதிா் விளைவுகள் மற்றும் புகாா்கள் தன்மை கண்டறிதலும் மேற்கொள்ளப்படுகிறது. இதன்மூலம், ஆரம்ப சுகாதார மையங்கள், மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் பொதுமக்கள், பச்சிளம் குழந்தைகள், கா்ப்பிணிகள், முதியோா் மற்றும் இணை நோயாளிகளுக்கு பாதுகாப்பான தரமிக்க மருந்துகள் மட்டுமே சென்றடையும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.