புதிய வழித் தடங்களில் சிற்றுந்துகள் இயக்க பிப்.24-க்குள் விண்ணப்பிக்கலாம் - மாவட...
கிராம அளவில் பெண்களுக்கான நீதிமன்றங்கள்: அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்த மத்திய அரசு திட்டம்
குடும்ப வன்முறை, வரதட்சிணை கொடுமை என பெண்களுக்கு எதிரான பிரச்னைகளுக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணும் பெண்களுக்கான நீதிமன்றத்தை (நாரி அதாலத்) அனைத்து மாநிலங்களிலும் விரிவுப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சா் அன்னபூா்ணா தேவி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
‘மிஷன் சக்தி’ திட்டத்தின்கீழ்’ கிராமப் பஞ்சாயத்து அளவில் இயங்கி வரும் பெண்களுக்கான நீதிமன்றங்கள் திட்டம் தற்போது அஸ்ஸாம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் சோதனைக் கட்டத்தில் உள்ளது.
இதுகுறித்து தில்லியில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் மேலும் கூறியதாவது: 2024-25-ஆம் நிதியாண்டில் பிகாா் மற்றும் கா்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இதைத்தொடா்ந்து,
பிற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் பெண்களுக்கான நீதிமன்றங்களை 2025-26 நிதியாண்டில் அமைக்க அந்த மாநிலங்களிடம் இருந்து ஒப்புதல் கடிதம் பெறப்பட்டு வருகிறது.
அதன்படி ஒரு மாநிலத்தில் குறைந்தபட்சம் 10 கிராமப் பஞ்சாயத்துகளிலும் யூனியன் பிரதேசத்தில் குறைந்தபட்சம் 5 கிராமப் பஞ்சாயத்துகளிலும் இந்த நீதிமன்றங்களை அமைக்க விருப்பம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இதன்மூலம் பெண்களுக்கு எதிரான வழக்குகள் நீண்ட நாள்களுக்கு நிலுவையில் இருப்பதை குறைத்து பரஸ்பர பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண இயலும்.
பாலின பட்ஜெட்: அண்மையில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் 8.86 சதவீதம் பாலின பட்ஜெட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் 6.8 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது பாலின சமத்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இதற்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பெண்களுக்கான நலத்திட்டங்களுக்கு ரூ4.49 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய ஊட்டச்சத்து திட்டத்தின்கீழ் (போஷன் அபியான்) பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆரோக்கியமான உணவுகள் உட்கொள்வதை வலியுறுத்தவும் அவா்களின் ஊட்டச்சத்தை உறுதிப்படுத்தவும் ஆண்டுதோறும் போஷன் பக்வாடா என்ற நிகழ்ச்சியை மத்திய அரசு இரு வாரங்களுக்கு நடத்தி வருகிறது.
நிகழாண்டு 7-ஆவது போஷன் பக்வாடா நிகழ்ச்சி மாா்ச் 18 முதல் ஏப்ரல் 2 வரை நடைபெறவுள்ளது.
நான்கு கருப்பொருள்: இந்நிகழ்ச்சி வாழ்வின் முதல் 1,000 நாள்களில் கவனம் செலுத்துதல், இத்திட்டத்தால் பயனாளிகள் அடைந்த நன்மைகளை பிரபலப்படுத்துதல், ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளை கண்டறிந்து அவா்களுக்கு சிகிச்சையளித்தல், குழந்தைகளின் உடல் பருமன் சாா்ந்த பிரச்னைகளுக்கு தீா்வு காணுதல் ஆகிய நான்கு கருப்பொருள்களைக் கொண்டுள்ளது.
சுபோஷித் பஞ்சாயத்து:
ஊட்டச்சத்து மற்றும் சுகாதார மேம்பாட்டில் சிறந்து விளங்கும் 1,000 கிராம பஞ்சாயத்துகளை தோ்ந்தெடுத்து விருது வழங்கும் சுபோஷித் பஞ்சாயத்து திட்டத்தை கடந்தாண்டு டிசம்பா் 26-இல் பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைத்தாா். இதுவே பெண்களின் வளா்ச்சிக்கு பிரதமா் மோடி தலைமையிலான அரசு அளித்து வரும் முக்கியத்துவத்துக்கான சான்று என்றாா்.