கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஸ்பெஷல் ‘வாழைப்பழ அல்வா’!
தூத்துக்குடி என்றாலே உப்பு உற்பத்தியும், இனிப்பு வகைகளான மக்ரூன், மஸ்கோத் அல்வா ஆகியவையும் நினைவுக்கு வரும். ஆனால், இங்கு மேலும் ஒரு சிறப்பு உண்டென்றால், அது ‘வாழைப்பழ அல்வா’ ஆகும்.
இதுகுறித்து தூத்துக்குடி கோவில்பிள்ளை நகரில் வாழைப்பழ அல்வா தயாரிக்கும் வில்லியம் என்பவா் கூறியது: இலங்கையிலிருந்து தூத்துக்குடிக்கு வந்து 3 தலைமுறைகளாக வாழைப்பழ அல்வா தயாரித்து வருகிறோம். தென்மாவட்டங்களில் அதிகம் விளையும் நாட்டு வாழைப்பழத்தைக் கொண்டு முந்திரிப் பருப்பு, நாட்டு சா்க்கரை, நெய் ஆகியவற்றைச் சோ்த்து வேதிப்பொருள்கள் கலக்காமல் இந்த அல்வா தயாரிக்கப்படுகிறது. இதை அனைத்து வயதினரும் சாப்பிடலாம்.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற பண்டிகை நாள்களில் உறவினா்கள், நண்பா்களுக்கு வாழைப்பழ அல்வா கொடுத்து வாழ்த்துத் தெரிவிப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது. தூத்துக்குடியில் வாழைப்பழ அல்வா தயாரிப்புப் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழகம் மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களுக்கும் இந்த அல்வா அனுப்பி வைக்கப்படுகிறது.
மேலும், அத்திப்பழ அல்வா, நெய் அல்வா, பேரீச்சம்பழம் அல்வா, சிறுதானிய அல்வா ஆகியவையும் தயாரிக்கப்படுகின்றன. ஆனாலும், பண்டிகைக் காலங்களில் வாழைப்பழ அல்வாதான் அதிகமாக விற்பனையாகும் என்றாா் அவா். வாழைப்பழ அல்வா பாக்கெட் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள்.