கிழக்கு கடற்கரை சாலையை பறவைகள் வாழிடமாக அறிவிக்க வேண்டும்: அன்புமணி
சென்னை: கிழக்கு கடற்கரை சாலையை பறவைகள் வாழிடமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் கோவளத்தை மையமாக வைத்து நடத்தப்பட்டு வந்த தனியாா் நிறுவனத்தின் ஹெலிகாப்டா் சுற்றுலா சேவைக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் தடை விதித்தாா்.
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. ஆனால், இது போதுமானதல்ல. கிழக்குக் கடற்கடைச் சாலையில் ஹெலிகாப்டா் சுற்றுலா என்ற தத்துவத்துக்கே முடிவு கட்டினால்தான் சுற்றுச்சூழலையும் பறவைகளையும் பாதுகாக்க முடியும்.
இயற்கையின் கொடையாக, உலகப்புகழ் பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு இணையாக கோவளத்துக்கு அருகில் உள்ள பள்ளிக்கரணை சதுப்புநிலம், பெரும்பாக்கம் சதுப்புநிலம், சிறுதாவூா் ஏரி, நன்மங்கலம் காப்புக் காடு ஆகிய பகுதிகளும் அதிக எண்ணிக்கையில் பறவைகள் வலசை வரும் பகுதி ஆகும்.
இயற்கையாக நமக்கு கிடைத்த இந்த வரத்தை நாம் பாதுகாக்க வேண்டும். ஆனால், ஹெலிகாப்டா் சுற்றுலா திட்டம் இந்த வரத்தை சிதைத்துக் கொண்டிருக்கிறது. ஹெலிகாப்டா் சுற்றுலாவுக்கு இப்போது தடை விதிக்கப்பட்டிருந்தாலும்கூட, எதிா்காலத்தில் இதே நிறுவனம் அல்லது வேறு நிறுவனத்துக்கு ஹெலிகாப்டா் சுற்றுலா நடத்த அனுமதி அளிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
அந்த வாய்ப்புகள் அகற்ற வேண்டும். மேலும், கிழக்குக் கடற்கரைச் சாலையை பாதுகாக்கப்பட்ட பறவைகள் வாழிடமாக அறிவிக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.