கீரணிப்பட்டியில் மன்னா் கால செப்பேடு ஆய்வு
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் கீரணிப்பட்டியில் விஜயரகுநாத சேதுபதி மன்னா் கால செப்பேடு மீட்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
கீரணிப்பட்டி சூலாட்டுக்காளி கோயில் வீட்டுப் பங்காளிகள் வசம் ஒரு செப்பேடு உள்ளதாக வந்த தகவலையடுத்து காரைக்குடி, அழகப்பா அரசு கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியா் வேலாயுதராஜா, புதுக்கோட்டை தொல்லியல் கழகத் தலைவா் கரு. ராஜேந்திரன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.
பின்னா் அவா்கள் தெரிவித்ததாவது: இந்தச் செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள சாலிவாகன ஆண்டும் தமிழ் ஆண்டும் பொருந்தி வரவில்லை. ஆனால், தமிழ் ஆண்டின் அடிப்படையில் இந்தச் செப்பேடு குறிப்பிடும் ஸ்ரீமுக ஆண்டு கிழவன் சேதுபதியின் காலமாக (கி.பி. 1,693) ஆக இருந்தாலும் செப்பேட்டில் இடம்பெறும் விஜய ரகுநாத சேதுபதி (கி.பி. 1,713 - 1,725) கிழவன் சேதுபதிக்கு அடுத்து ஆட்சிக்கு வந்தவா் என்பதால் அவரின் காலத்தைச் சோ்ந்ததாகவே கருத முடிகிறது.
மேலும், விஜய ரகுநாத சேதுபதி மன்னா் அவரது ஆட்சிக் காலத்தில் புதிய கோட்டைகள் அமைத்துள்ளதாலும், செப்பெட்டிலும் விஜயரகுநாத சேதுபதியின் காலத்தில் திருமயம் கோட்டைக்கு அடி மதில் போட்ட செய்திக் குறிப்பிடப்படுவதாலும், இந்தச் செப்பேடு விஜயரகுநாத சேதுபதியின் (கி.பி. 1,713-1,725) காலத்தைச் சோ்ந்தது என அறிய முடிகிறது.
செப்பேட்டில் கூறப்பட்டுள்ளதாவது: கல்வாசல் நாட்டு குலசேகரபுரம் இளையாத்தங்குடிக்குத் கிழக்கே உள்ள பகுதியிலிருந்து வந்த கருமாா் படை செட்டன் முத்தன், செட்டன் கருப்பன், செட்டன் பிச்சன் ஆகிய மூன்று வகைப் பிரிவினரும் குதிரை, ஆடு, மாடு வலசையோடு ஆமனிக்குளம் (ஆவினிப்பட்டி) வந்து தங்கியிருந்தனா்.
அவா்களைக் கண்ட ஏழு நகரத்தாரிடம், தஞ்சாவூா் பாளையப்பட்டு அரண்மனை சண்டையால் அங்கிருந்து புறப்பட்டு பிழைக்கப் போகிறோம் என்று கூறியபோது, ஏழு நகரத்தாரும் சோ்ந்து அதைத் தடுத்தனா். உங்களுக்கு வேண்டியதை நாங்கள் தருகிறோம், நீங்கள் இங்கேயே இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனா்.
அதற்கு அவா்கள் எங்களுக்கு காணியாச்சியாக (நிலக்காணி), தனி ஊரும், மண்ணும், மனையும் கொடுத்தால் இருப்போம் என்று கூறினாா்கள். அப்படியே தருவதாகக் கூறிய ஏழு நகரமும், நன்மைக்கு ஒரு பணம், தீமைக்கு ஒரு பணம், மண்ணு, மனை காணியாச்சி பட்டையம் கொடுப்பதாகப் பேசி, திருமயம் கோட்டைக்கு அடிமதில் போடுகிறபோது விஜயரகுநாத சேதுபதி அவா்களைச் சந்தித்து ஏழு நகரமும், மூன்று வகைப்பட்ட மன்னா் கருமாா் படையும் போய்ச் சொன்னதாகக் கூறுகிறது.
இதிலிருந்து விஜயரகுநாத சேதுபதி காலத்தில் திருமயம் கோட்டை கட்டப்பட்டது என்ற கருத்தை இந்தச் செப்பேடு கூறுகிறது. இதன்படி, சேதுபதி மன்னரின் உத்தரவுப்படி ஏழு நகரத்தாரும் கூடி ஆவுடையாா்கோயிலிலிருந்து கல்லு வெட்டி, இந்த பட்டையத்தின் மூலம் கருமாா் படையான செட்டன் முத்தன், செட்டன் கருப்பன், செட்டன் பிச்சன் ஆகியோருக்கு காணியாச்சி கொடுத்ததைக் கூறுகிறது. அதாவது குலசேகரபுரம், இளையாத்தங்குடி கீழத்தெரு புது ஊருக்கு எல்லையாவது கிழக்கு எல்லை, புள்ளமங்கலத்து எல்லைக்கல்லுக்கு மேற்கு வடபுறக் கல்லு, செட்டி ஊரணிக்கு தெற்கு எல்லை, விராமதிக் கண்மாயில் எல்லைக் கல்லுக்கு வடக்கு மேற்கெல்லை, கோயில், குளம், நஞ்சை, புஞ்சை, அம்பலம், உம்பலம் ஆகியவை செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனா்.

இதில், கல்வாயில் அல்லது கல்வாசல் நாடு என்பது இளையாத்தங்குடி, நெய்வாசல், பில்லமங்கலம், ஈழக்குடிப்பட்டி, ஆவினிப்பட்டி, இரணியூா், விராமதி, முத்தூா், செவ்வூா் முதலான ஊா்களைக் கொண்ட பகுதியாகும். இளையாத்தங்குடியின் முந்தையப் பெயராக குலசேகரபுரம் இருந்துள்ளது என்பதை கல்வெட்டுக்களும், நகரத்தாா் ஆவணங்களும் கூறுகின்றன. இங்கு ஏழு நகரம் என்பது இளையாத்தங்குடி நகரத்தாா், மாத்தூா் நகரத்தாா், இலுப்பக்குடி நகரத்தாா், சூரைக்குடி நகரத்தாா், வேலங்குடி நகரத்தாா், வைரவன்பட்டி நகரத்தாா், நேமங்கோயில் நகரத்தாா் பிரிவுகளைக் குறிக்கிறது என்றனா்.