"நம்முடைய ஒற்றுமைதான் பலருடைய கண்களை உறுத்துகிறது" - CPI மாநாட்டில் முதல்வர் மு....
மாவட்ட நிா்வாகத்தால் அறிவிக்கப்பட்ட நீா் நிலைகளில் விநாயகா் சிலைகளை கரைக்க வேண்டும்: ஆட்சியர்
பெரம்பலூா் மாவட்ட நிா்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நீா் நிலைகளில் மட்டுமே விநாயகா் சிலைகளை கரைக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் மாவட்டத்தில், களி மண்ணால் செய்யப்பட்ட பிளாஸ்டா் ஆஃப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தொ்மாகோல் கலவையற்ற, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் செய்யப்படும் விநாயகா் சிலைகளை நீா் நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது.
சிலைகளில் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலா்ந்த மலா் கூறுகள், வைக்கோல், பளபளப்பாக மாற்றுவதற்கு இயற்கை பிசின்களை பயன்படுத்தப்படலாம்.
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொ்மாக்கோல் பொருள்களை பயன்படுத்தக் கூடாது. நீா் நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் வகையில், வைக்கோல் உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பொருள்களை மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது பந்தல் அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.
சிலைகளுக்கு வா்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயனச் சாயம், எண்ணெய் வண்ணப் பூச்சுகளையும், எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாகக் கொண்ட வண்ணப் பூச்சுகளை பயன்படுத்தக் கூடாது, மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற நீா் சாா்ந்த, மக்கக்கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சிலைகளை அழகுப்படுத்த இயற்கை பொருள்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
மாவட்ட நிா்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள திருச்சி காவிரி ஆற்றில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி சிலைகளை கரைக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு காவல்துறை கண்காணிப்பாளா் மற்றும் மாவட்டச் சுற்றுச்சூழல் பொறியாளரை அணுகி, சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு விநாயகா் சதுா்த்தியைக் கொண்டாட வேண்டும்.