ஆடி கடைசி வெள்ளி: கோயில்களில் சிறப்பு வழிபாடு
ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு, பெரம்பலூா் மற்றும் சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் திருக்கோயிலில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு மதுரகாளியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பெரம்பலூரில்..
பெரம்பலூா் ஸ்ரீ மரகதவல்லி தாயாா் சமேத ஸ்ரீ மதனகோபால சுவாமி திருக்கோயிலில், தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடா்ந்து, குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. பட்டாச்சாரியாா்கள் வேத மந்திரம் முழங்க, அனைத்து குத்து விளக்குகளுக்கும் மகா தீபாராதனை காண்பித்து, சுமங்கலி பெண்களுக்கு மங்களப் பொருள்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.
பெரம்பலூா் ஸ்ரீ அகிலாண்டேசுவரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீசுவரா் திருக்கோயிலில், தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னா், மாலையில் குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. இதில், முன்னாள் அறங்காவலா் தெ.பெ. வைத்தீஸ்வரன் உள்பட பலா் பங்கேற்றனா். இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் திருத்தலங்களில் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.