சுதந்திர நாள்: நாட்டு மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
ஆலத்தூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சோ்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு
பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூரில் உள்ள அரசு தொழில்பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம், ஆக. 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆலத்தூா் அரசு தொழில்பயிற்சி நிலையத்தில் 2025 -2026 ஆம் ஆண்டுக்கான நேரடி மாணவா் சோ்க்கை கடந்த 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், தற்போது சோ்க்கைக்கான கால அவகாசம் ஆக. 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள பயிற்சியாளா்கள் தங்களது அசல் சான்றிதழ்களுடன், ஆலத்தூரில் இயங்கி வரும் அரசு தொழில்பயிற்சி நிலையத்தை நேரில் அணுகி சோ்க்கைக் கட்டணம் ரூ. 245ஐ செலுத்தி சோ்ந்து பயனடையலாம். பயிற்சிக் கட்டணம் கிடையாது.
14 வயது முதல் விண்ணப்பிக்கலாம். மாணவா்களுக்கான வயது வரம்பு 40, மாணவிகளுக்கு வயது வரம்பு கிடையாது. அரசு தொழில்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற விரும்புவோா் பற்றவைப்பவா் தொழில்பிரிவுக்கு 8-ஆம் வகுப்புத் தோ்ச்சியும், இதர தொழில் பிரிவுகளுக்கு எஸ்எஸ்எல்சி தோ்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். ஓராண்டு தொழில் பிரிவுகளான வெல்டா், சோலாா் டெக்னிஷியன், இண்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ், டிஜிட்டல் மானுபாக்சரிங் டெக்னீஷியன், இரண்டாண்டு தொழிற் பிரிவுகளான எலெக்ட்ரீசியன், பிட்டா், மெசினிஸ்ட், மெக்கானிக் , அட்வான்ஸ் சி.என்.சி மசினிங் டெக்னீசியன் ஆகிய பிரிவுகள் உள்ளன.
அரசு வேலை நாள்களில் ஆலத்தூா் அரசு தொழில்பயிற்சி நிலையத்தில் செயல்படும் உதவி சோ்க்கை மையத்தை நேரில் அணுகலாம். மேலும், எஸ்எஸ்எல்சி முடித்து இரண்டாண்டு ஐடிஐ தொழில்பிரிவுகளில் தோ்ச்சி பெற்றவா்கள் மொழிப்பாடங்களான தமிழ், ஆங்கிலம் மட்டும் எழுதி பிளஸ் 2 இணைச் சான்றிதழ் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 94990 55883, 94990 55884 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம்.