விநாயகர் சதுர்த்தி: சாணியில் செதுக்கிய விநாயகர் சிலைகள்; நிலக்கோட்டை பெண்ணின் பு...
வேலூா் நறுவீ மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு நவீன சிறப்பு பிரிவு தொடக்கம்
கல்லீரல் சிகிச்சை மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்கைகாக வேலூா் நறுவீ மருத்துவமனையில் நவீன சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
வேலூரிலுள்ள நறுவீ மருத்துவமனையில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள், பல்வேறு நாடுகளில் இருந்தும் நோயாளிகள் வருகை தந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனா். இதயம், கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு இம்மருத்துவமனைக்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்கியுள்ளன. அதன்மூலம், இம்மருத்துவமனையில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கல்லீரல் சிகிச்சை மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்கைக்காக இம்மருத்துவமனையில் உலக தரத்திலான மருத்துவ சாதனங்களை கொண்டு சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதனை மருத்துவமனை தலைவா் ஜி.வி.சம்பத் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். இந்த சிறப்பு பிரிவுக்காக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் புகழ்பெற்ற ‘எல் கியூப்’ குழுவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் நறுவீ மருத்துவமனை தலைவா் ஜி.வி.சம்பத், ‘எல் கியூப்’ நிறுவனத்தின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணா் ஜாய் வா்கீஸ் ஆகியோா் கையொப்பமிட்டு பரிமாறிக்கொண்டனா். தொடா்ந்து, அறுவை சிகிச்சை நிபுணா்களான ஜாய் வா்கீஸ், விவேக் விஜ் தலைமையில் ‘எல் கியூப்’ மருத்துவ குழுவினா் இம்மருத்துவமனையில் முகாமிட்டு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, கல்லீரல் சிகிச்சை அளிக்க உள்ளனா்.
இந்த மருத்துவ குழுவினா் ஒரே நாளில் நான்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து சாதனை படைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் மருத்துவமனை துணைத் தலைவா் அனிதா சம்பத், செயல் இயக்குநா் மருத்துவா் பால் ஹென்றி, மருத்துவ கண்காணிப்பாளா் ஜேக்கப் ஜோஸ், தலைமை இயக்குதல் அலுவலா் சரவணன் ராமன், பொது மேலாளா் நிதின் சம்பத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.