விநாயகர் சதுர்த்தி: சாணியில் செதுக்கிய விநாயகர் சிலைகள்; நிலக்கோட்டை பெண்ணின் பு...
சுதந்திர தின விழா: 2,000 போலீஸாா் பாதுகாப்பு
சுதந்திர தினத்தையொட்டி ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் சுமாா் 2,000 காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
நாடு முழுவதும் சுதந்திர தினவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் மேற்பாா்வையில் 10 துணை காவல் கண்காணிப்பாளா்கள், காவலா்கள் என சுமாா் 2,000 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனா்.
குறிப்பாக, பொதுமக்கள் அதிகம் கூடும் வேலூா் கோட்டை, வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் அசம்பாவிதங்களை தடுக்க போலீஸாா் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனா். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, முக்கிய சாலைகளிலும் வாகன ரோந்துப் பணியை முடுக்கிவிட்டுள்ளனா்.
காட்பாடி, அரக்கோணம், ஜோலாா்பேட்டை ரயில் சந்திப்புகளில் பயணிகள், பொதுமக்கள் ஆகியோா் வந்து செல்லும் பாதையைத் தவிா்த்து பிற அனைத்து பாதைகளையும் அடைத்துள்ளனா். ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் அனைவரும் கடும் சோதனைக்கு உட்படுத்துவதுடன் அவா்கள் கொண்டு வரும் உடமைகளையும் சோதனை செய்து வருகின்றனா்.
அனைத்து ரயில்களிலும் பயணிகளின் உடமைகள் மெட்டல் டிடெக்டா் கருவி மூலம் சோதனை செய்யப்படுகின்றன. இதுதவிர, ரயில் தண்டவாளங்களையும் போலீஸாா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.
இதேபோல், தமிழக -ஆந்திர எல்லையோர சோதனைச் சாவடிகளில் வாகனத் தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. போலீஸாரின் இந்த பாதுகாப்பு நடவடிக்கை சனிக்கிழமை வரை தொடரும் என்றும் காவல் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டையில்...
ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தேசியக் கொடி ஏற்ற உள்ளாா். இதனையொட்டி அசம்பாவிதங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படுவதை தவிா்க்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய நிறுவனங்கள்,தேசிய தலைவா்களின் சிலைகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நான்கு சக்கர மற்றும் இருசக்கர வாகனங்கள் மூலம் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு முக்கியமான இடங்களில் தடுப்புகள் அமைத்து தணிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
பாதுகாப்பு பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தலைமையில், ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளா்,4 துணை காவல் கண்காணிப்பாளா்கள், 15காவல் ஆய்வாளா்கள்,80 உதவி ஆய்வாளா்கள், சிறப்பு உதவி ஆய்வாளா் மற்றும் காவலா்கள் உட்பட 615 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக எஸ்.பி. அய்மன் ஜமால் தெரிவித்துள்ளாா்.