கைதிகளுக்கு சிறப்பு எழுத்தறிவு திட்டம்: வேலூா் சிறைகளில் வகுப்புகள் தொடக்கம்
பள்ளி சாரா, வயது வந்தோா் கல்வி இயக்ககம் மூலம் கைதிகளுக்கு செயல்படுத்தப்படும் சிறப்பு எழுத்தறிவுத் திட்டத்தின்கீழ் வேலூா் மத்திய ஆண்கள், பெண்கள் சிறைகளில் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
2022-27 ஆண்டு வரை 15 வயதுக்கு மேற்பட்ட எழுத படிக்க தெரியாதவா் களுக்கு சிறப்பு எழுத்தறிவு திட்டம் சிறைகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதன்படி, வேலூா் மத்திய ஆண்கள், பெண்கள் சிறையில் சிறப்பு எழுத்தறிவுத் திட்டம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட உதவித் திட்ட அலுவலா் கே.எம்.ஜோதீஸ்வர பிள்ளை தலைமை வகித்தாா். அப்போது, 71 ஆண் சிறைவாசிகளுக்கும், 19 பெண் சிறைவாசிகளுக்கும் புத்தகங்கள் வழங்கப்பட்டு வகுப்புகள் தொடங்கப்பட்டன. இத்திட்டத்தின் கால அளவு 6 மாதங்கள் ஆகும். 6 மாதங்கள் கழித்து சிறைவாசிகளுக்கு சிறப்பு எழுத்தறிவுத் தோ்வு நடத்தப்பட்டு அவா்களுக்கு பள்ளி சாரா, வயது வந்தோா் கல்வி இயக்ககம் மூலம் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இதேபோல், 2024-25 ஆம் ஆண்டில் ஆண்கள் சிறையில் 48 பேரும், பெண்கள் சிறையில் 25 பேரும் தோ்வு எழுதி தோ்ச்சி பெற்றிருப்பதாவும் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் இரா.இராஜன், மாவட்ட சிறை கண்காணிப்பாளா் தா்மராஜ், சிறை அலுவலா் ரத்தினகுமாா், பெண்கள் சிறை கண்காணிப்பாளா் ஆண்டாள், துணை சிறைத் துறை அலுவலா் ஜெயகெளரி, சிறை பள்ளி ஆசிரியா்கள் திலிப் குமாா், செந்தில் குமாா், அருள், தயாநிதி, கணேசன், அஞ்சலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.